02 May 2011

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தீவிரவாத தலைவன் பின்லேடன் குண்டுவீசி கொலை

உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியாக கருதப்பட்டவர் ஒசாமா பின்லேடன்.
சவூதி அரேபியாவில் பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர், அல்கொய்தா எனும் தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்து உலகம் முழுவதும் மாபெரும் தற்கொலை தாக்குதல்களை நடத்தி வந்தான்.
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி பின்லேடனின் உத்தரவின் பேரில் அல்கொய்தா தீவிரவாதிகள் 19 பேர், 5 விமானங்களை கடத்தி தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டனர். அதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோத வந்த ஒரு விமானத்தின் முயற்சி மட்டும் தோல்வியில் முடிந்தது. மற்ற 4 விமானங்களும் கட்டிடங்களில் மோத செய்யப்பட்டன.
நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் இரு கோபுரங்கள் மீது 2 விமானங்கள் அடுத்தடுத்து வந்து மோதின. தொலைக்காட்சியில் இந்த காட்சிகளை நேரில் பார்த்த உலக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா, இந்த தாக்குதல்களால் நிலைகுலைந்து போனது. 2973 பேர் பலி தற்கொலை தாக்குதலுக்கு கடத்தப்பட்ட 4 விமானங்களில் இருந்த 246 பேர் பலியானார்கள். இரட்டை கோபுரங்களில் இருந்தவர் களில் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். அதோடு உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் எரிந்து நொறுங்கி விழுந்து அழிந்தன.
இதையடுத்து அமெரிக்கா ஆவேச பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் ஜூனியர் புஷ் உத்தரவின் பேரில் அமெரிக்காவின் அனைத்து படை பிரிவுகளும் அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி இருந்த ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தின.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதரவுடன் நடந்து வந்த ஆட்சி விரட்டப்பட்டது. இதனால் பின்லேடனும், அவரது அல்கொய்தா தீவிரவாதிகளும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள மலைக்காடுகளில் ஊடுருவி பதுங்கினார்கள். அவர்களை அழிக்க அமெரிக்காவின் அதிநவீனப் படைகள் களத்தில் இறக்கி விடப்பட்டன.
பாகிஸ்தான் - ஆப்கா னிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடி மக்கள் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் பின்லேடன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு சவால்களை அமெரிக்க படைகள் சந்திக்க வேண்டியதிருந்தது.
பின்லேடன் பல தடவை தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த போதும், அமெரிக்க படைகளிடம் சிக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான்.
பின்லேடன் தலைக்கு 25 மில்லியன் பவுண்டு பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும் அமெரிக்க ராணுவம் கடந்த 10 ஆண்டுகளாக மனம் தளராமல் அவனைத் தேடி வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பின்லேடன் தொடர்பாக அமெரிக்க உளவுப் படைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதன் மூலம் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள பல நகரங்களுக்கு ரகசியமாக வந்து செல்வது தெரிய வந்தது.
நேற்று முன்தினம் பின்லேடன் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தின் புறநகரில் உள்ள ஒரு விடுதியில் வேறு பெயரில் வந்து தங்கி இருப்பது அமெரிக்க உளவுப் படையினருக்கு தெரிய வந்தது. அவர்கள் பின்லேடனை உயிருடன் பிடிக்க திட்டமிட்டனர்.
இதற்காக அந்த விடுதியை சுற்றி உளவுப் படையினரை நிறுத்தினார்கள். இது பின்லேடன் கூட்டாளிகளுக்கு தெரிந்து விட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான்.
துப்பாக்கி சண்டை ஓய்ந்ததும் அந்த விடுதிக்குள் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். பின்லேடனின் உடலை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். தற்போது அவனது உடல் அமெரிக்காவில் பாதுகாப்பு படை வசம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை இன்று காலை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மிக முக்கிய போரில் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைத்து உள்ளதாக கூறினார்.
 பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை உறுதி செய்த அமெரிக்க அதிகாரிகள் அது தொடர்பான வேறு எந்த தகவல்களையும் வெளியிட மறுத்து விட்டனர். பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் அமெரிக்கா முழுவதும் மக்களிடம் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. வெள்ளை மாளிகை உள்பட முக்கிய நகரங்களில் திரண்ட அமெரிக்க மக்கள் உற்சாகத்துடன் யு.எஸ்.ஏ., யு.எஸ்.ஏ., என்று கோஷமிட்டனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் அமெரிக்கர்கள் விழாக்கோலமாக உள்ளனர். 
Source
www.maalaimalar.com/2011/05/02085922/bin-laden-killed-by-america-ar.html

No comments:

Post a Comment