06 June 2011

சோழநாட்டு சூரியன் வாழ்க! வாழ்கவே!!


அது எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நீதிக்கட்சி திராவிட கழகமாய் பெயர் மாற்றம் பெற்று இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதை, சமூக சீர்த்திருத்தத்தை தன் களமாய் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருந்த காலம்.

திராவிடர் கழகத்துக்கென தனி கொடியில்லை. கழக முன்னணியினர் கழகத்துக்கு என ஒரு கொடி வேண்டும் என முடிவு செய்து கொடியினை வடிவமைக்க கூடியிருக்கிறார்கள். தேசத்தின் இழிவை குறிக்கும் வகையில் கருப்பு நிறமும், அந்த இழிவினை ஒழிக்கும் புரட்சி நிறமாக சிகப்பினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது.

அந்த இளைஞர் 88 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளின் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு தமிழினத் தலைவரின் ரத்தம்!

அரசியல் தலைவர்களிலேயே அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி முழுமையான வாழ்வினையும், எவரெஸ்ட் உயரத்தையும் அடைந்த பரிபூரணத் தலைவர் ஒருவர் உண்டென்றால் உலக வரலாற்றிலேயே அது தமிழினத் தலைவர் கலைஞர் மட்டுமே.

நடிகர் திலகம் ஒருமுறை சொன்னபடி நமது வாழ்நாளிலே சிலவற்றை யாருக்காவது தரமுடியுமேயானால் உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் பாதியை தலைவர் கலைஞருக்கு தந்து... இன இழிவு நீங்க, தமிழனின் புகழ் தரணியெங்கும் பரவ அந்த தங்கத் தலைவனை பல நூற்றாண்டுகளுக்கு வாழவைத்திட வேண்டும்.

வாழும் தமிழே வாழி! நீ வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழனின் புகழ் உயரும் என கூறி, தமிழின் முகவரியாய் வாழும் வள்ளுவன் தலைவர் கலைஞரை வாழ்த்த வயதில்லாமல் உடன்பிறப்புகள் வணங்குகின்றோம்.

வாழ்க தமிழ்!! வெல்க தமிழினத் தலைவரின் நெஞ்சுரம்!!!
 
Source: http://www.luckylookonline.com/2011/06/blog-post.html

03 June 2011

கூடா ந‌ட்பு கேடா‌ய் ‌முடியு‌ம

திமுக தலைவர் கலைஞர், இன்று தனது 88வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 அ‌ப்போது பே‌சிய அவ‌ர், ''கூடா ந‌ட்பு கேடா‌ய் ‌முடியு‌ம்'' எ‌ன்ற பொ‌ன்மொ‌ழியை ‌தி.மு.க. தொ‌ண்ட‌ர்க‌ள் ‌பி‌‌ன்ப‌ற்‌றி நட‌க்க வ‌ே‌ண்டு‌ம்''
சமூக எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் திமுக தொண்டர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் கலைஞர் கேட்டுக்கொண்டார்.

20 May 2011

புதிய சட்டசபை கட்டிடத்தை அரசு கைவிட்டது ஏன்? புதிய தகவல்கள்

புதிய தலைமை செயலகத்தை தற்போது பயன்படுத்தாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புதிய தலைமை செயலகம் எதிரில் மிக அருகிலேயே கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் பாதை செல்கிறது. அந்த மேம்பாலத்தில் இருந்து எளிதில் சட்டமன்றத்தை தாக்க முடியும். எனவே, இது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ரூ.425 கோடிக்கு திட்டமிட்டு இதுவரை ரூ.1200 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அவசரமாக கட்டியதால் கட்டிடத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கசிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு முறைகேடுகள் காரணமாகவே செலவு பல மடங்காக உயர்ந்து இருக்கிறது என்று புகார்கள் வந்துள்ளன. வேலையும் இன்னும் முடியவில்லை. அதுபற்றி விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுவரை புதிய தலைமை செயலகத்தை எந்த அலுவலுக்கும் பயன்படுத்த அரசு விரும்பவில்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, அண்ணா சாலை பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க அரசு விரும்புகிறது. புதிய சட்டசபை கட்டிடத்தை பயன்படுத்துவது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறி உள்ளார்

18 May 2011

ஹீரோ!

இந்த கட்டுரையை எழுதி மிகச்சரியாக இன்றோடு ஈராண்டு ஆகிறது. வெட்டுக்காயத்தோடு தொலைக்காட்சிகளில் அன்று காட்டப்பட்ட முகம் பிரபாகரனாக இருக்காது என்று திடமாக நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஈராண்டில் சிதைந்தே வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2009 நவம்பர் 27 வரை அவர் உயிரோடிருப்பதாக பெருத்த நம்பிக்கையிலேயே இருந்தேன். அவர் மீதும், அவர் கட்டமைத்த இயக்கத்தின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றில் பலவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் கூட. ஆயினும் அவர்மீதான 'ஹீரோ ஒர்ஷிப்' எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் வீரவணக்கத்துக்கு உரித்தானவரே. இதுவரை உலகம் காணா ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!


எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன். ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.

மூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது. பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.

நேருமாமா மாதிரி எங்கள் குடும்பத்தில் ‘பிரபாகரன் மாமா’. ஆந்திர நண்பன் ஒருவன் எனக்கு அப்போது உண்டு. சிரஞ்சீவி படம் போட்ட தெலுங்குப் பத்திரிகைகளை காட்டி, எங்க மாமா போட்டோ வந்திருக்கு பாரு என்று காட்டுவான். தெலுங்குக் குடும்பங்களில் பெண்களுக்கு சிரஞ்சீவி ’அண்ணகாரு’. எனவே குழந்தைகளுக்கு ‘மாமகாரு’ என்று சொல்லி வளர்ப்பார்கள். நானும் பெருமையாக பிரபாகரன் படங்கள் வந்தப் பத்திரிகைகளை காட்டி, “எங்க மாமா போட்டோ உங்க மாமா போட்டோவை விட நிறைய புக்லே, பேப்பருலே வந்திருக்கு. உங்க மாமா சினிமாவில் தான் சண்டை போடுவாரு. எங்க மாமா நெஜமாவே சண்டை போடுவாரு” என்று சொல்லி வெறுப்பேற்றி இருக்கிறேன். உண்மையில் பிரபாகரன் எனக்கு மாமன்முறை உறவினர் என்றே அப்போது தீவிரமாக நம்பிவந்தேன்.

தீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.

சென்னையின் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.

குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.

அந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.

தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.

இந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான். இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!

எழுதியவர் யுவகிருஷ்ணா
Source : http://www.luckylookonline.com/2009/05/blog-post_8395.html

சீமான் - அன்றும் இன்றும்

சீமான் - அன்று
அரசின் இலவச கொள்கையை பற்றி என்ன நினைகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், "இலவசம் என்பது மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது. அரிசி, வீடு, இலவச திருமணம் என்ற பெயரில் மனைவியை கூட ஒரு ஆண் இலவசமாக பெறும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

“இந்த நாட்டில் எல்லாமே இலவசமாகிவிட்டது. சாப்பாடு, துணி, வீடு, மனைவி என எல்லாமே இலவசமாகத் தருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு, குழந்தை பெற்றுக்கொள்வது கூட இலவசம்தான். வலி மட்டும்தான் உங்களுக்கு. ஒரு மொத்த சமுதாயத்தையே சோம்பேறிகளாக்கிவிட்டதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

சீமான் - இன்று
தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள (ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசம், படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம், பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம், முதியோர் உதவி பெறும் பெண்களின் ஓய்வூதியம் ரூ. 500 இல் இருந்து ரூ.1,000ஆக உயர்வு, மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்வு, அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு )
மக்கள் நலத்திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவை. இதற்காக முதல்வரை பாராட்டுகிறோம்

ஏன் இந்த மாற்றம்???

16 May 2011

ஈழ பிரச்சினை:- மாநில முதல்வரால் ஓரளவுக்குதான் செயல்பட முடியும் – ஜெ

கேள்வி: உலகத் தமிழர்கள் அனைவரும் இன்றைக்கு உங்களிடம் இருந்து ஒரு துணையை, ஒரு பாதுகாப்பை எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, ஈழத் தமிழர்கள். அவர்களுக்கு உங்கள் நம்பிக்கை வார்த்தைகள் என்ன?

பதில்: இலங்கை தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆள்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பல அறிக்கைகளையும் வெளியிட்டு இருக்கிறேன். அந்த துயரங்களுக்கு காரணம் இலங்கை அரசுதான்.

ஆகவே தமிழர்கள் என்ற முறையில், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது, நம் அனைவருடைய கடமை. இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதற்கு நம்மால் முயன்றதை அனைவரும் செய்ய வேண்டும்.

மாநில முதல்வர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏனென்றால் இது சர்வதேச பிரச்சினை. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான்.
மத்திய அரசு இதில் என்ன செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவேன்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசு 2 வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, இனப் படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை அளிக்க இலங்கை அரசை வற்புறுத்துவதற்காக, இலங்கை அரசு பணியவில்லை என்றால், அந்நாட்டுக்கு எதிரான பொருளாதார தடைகள் கொண்டுவர இந்தியா மற்ற நாடுகளுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதைச் செய்தால் நிச்சயமாக இலங்கை அதிபர் பணிந்தாக வேண்டும். இலங்கை அரசு பணிந்தாக வேண்டும். பிரச்சினை தீரும்,” என்றார்.