Pages

03 November 2009

தீவிரவாதியை சுட்டுக் கொன்றதற்கு பரிசு காஷ்மீர் பெண் ருக்சனா போலீஸ் அதிகாரி ஆனார்

வீடு புகுந்து மிரட்டிய தீவிரவாதியை அவனது துப்பாக்கியையே பிடுங்கி சுட்டுக் கொன்ற காஷ்மீர் இளம்பெண் ருக்சனாவும், அவரது தம்பி அஜ்ஜாஷ், மாமா ஹூசைன் ஆகியோர் காஷ்மீரில் சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். ஜம்மு&காஷ்மீரில் ரஜோரி மாவட்டம் ஷதரா ஷரிப் மலைப் பகுதியில் கல்சியன் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் செப்டம்பர் 27ம் தேதி இரவில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர் இயக்க தீவிரவாதிகள் புகுந்தனர். தங்களுக்கு அடைக்கலம் தராவிட்டால் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டி அவர்களை தாக்கினர். அப்போது வீட்டில் இருந்த ருக்சனா கவுசர் என்ற 20 வயது இளம் பெண்ணும் அவரது தம்பி அஜ்ஜாசும் தீவிரவாதிகளுடன் போராடி அவர்களிடம் இருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியை பறித்துக் கொண்டனர். இளம் பெண் ருக்சனா ஏ.கே. 47 துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் ஒரு தீவிரவாதி குண்டு பாய்ந்து இறந்தான். ருக்சனாவின் தம்பி அஜ்ஜாஷ், மாமா ஹூசைன் ஆகியோர் கோடாரியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த மற்ற இரு தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். தீவிரவாதிகள் தாக்கியதில் ருக்சனாவின் பெற்றோர் காயம் அடைந்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி லஸ்கர் இயக்கத்தை சேர்ந்த அபு ஒசாமா என்பது தெரியவந்தது. இவன் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டவன். இவனை இளம் பெண் ருக்சனா துணிச்சலுடன் அவனது துப்பாக்கியாலே சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ருக்சனாவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் மாநில ஆளுனர் ஆகியோர் பாராட்டினர். இந்த தீரச் செயலை பாராட்டி ருக்சனா கவுசர், அவரது தம்பி அஜ்ஜாஷ், மாமா ஹூசைன் ஆகியோர் ஜம்மு&காஷ்மீர் போலீசில் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஜம்முவில் ரஜோரி மாவட்ட சிறப்பு போலீஸ் சூப்பிரண்ட் ஷப்காட் வட்டாலி தெரிவித்தார். கலாசியன் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தீவிரவாதிகள் எறிகுண்டு வீசி தாக்கியதால் இப்போது ரஜோரியில் வசித்து வருகிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment