Pages

24 August 2009

பிள்ளைகளின் காதலை பெற்றோர்கள் ஆதரிக்கலாமா?

எல்லா பெற்றோருமே நல்லவர்கள் தான்... தங்கள் பெண்ணோ, பையனோ காதலில் விழாதவரை.

காதல் என்ற வார்த்தை நாவலில் இனிக்கும். சினிமாக்களில் ரசிக்கும். திரையில் மட்டும் இடமிருந்தால் இவர்களே பிரிந்து போகிற காதல் ஜோடிகளை சேர்த்து விட்டுத்தான் வீடு திரும்புவார்கள். ஆனால் தங்கள் வீட்டிலேயே காதல் என்று வரும்போதுதான் `எடு அரிவாளை' என்கிறார்கள்.

எதனால் இந்த நிலை? தாங்கள் பார்த்துப் பார்த்து வளர்த்த தங்கள் வீட்டு வாரிசுகள் தங்களையும் மீறி முதன்முதலாக காதல் விஷயத்தில் முடிவெடுக்கும்போது, இவர்களால் அதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.. அதனால் தங்கள் குடும்ப கவுரவம் அடியோடு அதல பாதாளத்திற்கு போய்விடுவதாக எண்ணிக் கொள்கிறார்கள். இதனால் தான் வீடு தேடி வந்த காதல் இவர்களுக்கு கசக்கிறது.

இதில் காதலுக்காக வீட்டை விட்டுப் போவது பெண்களாக இருந்தால் இன்னும் விபரீதம். பெண்ணை சரியா வளர்க்கத் தெரியலை. அதனால் அவள் இஷ்டத்துக்கு மாப்பிள்ளையை பிடித்து விட்டாள் என்று ஊரார் பெண்ணின் பெற்றோர் காதுபடவே பேசி முக்கறுப்பார்கள். ஓடிப்போனது பெண் என்பதால் அப்புறமாய் வெளியில் தலை காட்ட கூசும் சில பெற்றோர், மானம் போய்விட்டதாக முடிவெடுத்து அவசரமாய் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

இங்கே தான் பெற்றோர் தவறான முடிவுக்குப் போகிறார்கள். மரணத்துடன் மட்டும் முடிந்துவிடுமா இவர்களின் மானம் பற்றிய விஷயம்? கிராமமாக இருந்தால் இதற்குப் பிறகு தான் கண் காது மூக்கு வைத்தெல்லாம் பேசத் தொடங்குவார்கள். ஏனென்றால் பதில் சொல்லவோ, மறுப்பு தெரிவிக்கவோ சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இல்லை என்கிற தைரியம் தான்.

பொதுவாகவே நம்மைப்பற்றிய உலகத்தின் கணிப்பு எப்போதுமே மாறுபட்டதாகத்தான் இருக்கும். ஒருவன் நேர்மையாக சம்பாதித்து சொத்து வாங்கினாலும் `யாரை ஏமாற்றி சம்பாதித்த பணமோ...' என்று நாக்கூசாமல் பேசுவார்கள். அதுமாதிரி பங்குச்சந்தை போன்ற முதலீட்டில் அதிகப் பணம் போட்டு அதனால் லட்சங்களை கோடிகளை ஒரு போன் தகவலில் இழந்து வீதிக்கு வரும் பணக்காரர்களையும் இப்படிப்பட்டவர்கள் விட்டு வைப்பதில்லை. `இவன் எத்தனை பேரை வஞ்சித்து சேர்த்த பணமோ... ஒரு நாளில் போய்விட்டது' என்று பேசுவார்கள். இதைத்தான் ஒரு சினிமாக்கவிஞர், `வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா' என்று பாடிவைத்தார்.

இப்படி சகமனிதர்கள் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சமூகம் பற்றிய பயம் நம்மில் பலருக்கும் எயுபோதுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பயம் பிள்ளைகள் கல்யாண விஷயத்திலும் தொடர்கிறது. முதலில் காதல்வயப்பட்டது தங்கள் பெண் என்றால், அவளின் மனம் கவர்ந்தவன் எந்த சாதி என்று தெரிய தலைப்படுகிறார்கள். அடுத்தது மதம். காதலின்போது மனம் மட்டுமே தெரியும். மதம் தெரியாது. கல்யாணத்திற்குப் பிறகு அவரவரின்மாறுபட்ட வழிபாடுகள் ஆளுக்கொரு தனிப்பாதையை எற்படுத்தி விடக்கூடும். அதனால் காதல் காணாமல் போய் தம்பதிகள் எப்போதாவது விவாகரத்துக்காக கோர்ட்டில் மட்டுமே சந்திக்கும் சூழல் உருவாகி விடும். இதற்காகவும் கூட காதல் என்றால் பெற்றோர் பயப்படத் தொடங்கி விடுகிறார்கள்.

காரணம், பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணங்களில் சாதி, மதம் இரண்டும் நிச்சயம் வேறுவேறாக இருக்காது. அதோடு தங்கள் தகுதிக்கேற்ற இடமாகப் பார்த்தே திருமணம் செய்து வைக்கிறார்கள்.அதனால் சின்னச்சின்ன பிரச்சினைகள் எப்போதாவது வந்து போவதுடன் பிரச்சினை தீர்ந்து விடும்.

காதல் விஷயத்திலோ முதலில் எல்லாமே சரியாகத்தான் தெரியும். காதல் வளர்ந்த நேரத்தில் காதலி காதலனிடம் "எங்கள் வீட்டில் அப்படியொன்றும் பெரிய வசதியில்லை. அதனால் உங்கள் வீட்டில் எதிர்பார்க்கிற மாதிரியெல்லாம் நகை, ரொக்கம் தரமுடியாது'' என்று தங்கள்குடும்ப சூழலை பக்குவமாக சொல்வாள். அந்தக் காதலன் அப்போது அதை பெரிதுபடுத்துவதில்லை. காதல் வேகத்தில் `கண்ணே!ப்யே தங்கம். உனக்கெதற்கு தங்கம்? என்பதாக கவிதை பாணியில் பேசி காதலி வாயை அடைத்து விடுவான்.

இதில் கூட சில காதலன் வீட்டுப் பெற்றோர் தங்கள் பக்க நியாயத்தில் உறுதியாக இருக்கிறார்கள். `ஒரு பெண்ணை காதலித்தாயா? சரி. இருந்து விட்டுப் போகட்டும். நாங்கள் பார்த்த இடத்தில் உனக்கு பெண் வீட்டார் இவ்வளவு செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். அதில் பாதியாவது இந்தப் பெண் வீட்டில் தேறுமா?' என்று வெளிப்படையாகவே கேட்கிறார்கள். இந்த இடத்தில் பல காதல்கள் அப்போதே அறுபடத் தொடங்கி அம்பேல் ஆகி விடுகிறது. காதலை பொருளாதாரம் குறுக்கிட்டு பிரிப்பது பெரும்பாலும் இந்த இடத்தில் தான்.

சில காதல் ஜோடிகள் தான் கடைசிவரை காதலில் தீவிரம் காட்டுகிறார்கள்.`என்ன வந்தாலும் எது நடந்தாலும் என் இதயத்து மாளிகை உன் உரிமை' என்று உறுதி கொடுத்து, அப்புறம் வரும் எந்த சோதனையையும் சந்திக்கத் தயாராகி விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் தங்கள் கடைசி அஸ்திரமாக பெற்றோர் அவிழ்த்து விடும், `நாங்க எல்லாரும் இனிமே தூக்கில் தான் தொங்கணும்' போன்ற வாசகங்கள் எடுபடாது. ஒருவேளை பெற்றோர் அப்படி விபரீத முடிவெடுத்து விட்டால் கூட தங்கள் காதலை திருமணம் வரை கொண்டுபோய் விடுவார்கள், இந்த தீவிர காதல் ஜோடிகள்.

தங்கள் பெண்ணோ பையனோ காதல்வயப்பட்டுவிட்டால் பெற்றோரின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்? தங்கள் பெண்ணோ பையனோ தங்கள்கையை மீறிப்போக காரணமே தாங்கள்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் வளரும் ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளைகளிடம் எந்தவொரு விஷயமானாலும் இவர்கள் நிச்சயம் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். பெற்றோரே நல்ல நண்பர்களாகவும் அமையும் பிள்ளைகள் அத்தனை தூரம் யாரோ முகம் தெரியாத ஒருவன் (ஒருத்தி) காட்டும் அன்பில் உருகிப் போவதில்லை. வீட்டில் சரிவர கவனிக்கப்படாமல் `அன்பு என்ன விலை? அக்கறை என்ன விலை?' என்ற கேட்கிற மாதிரியான வீடுகளில் வளரும் பிள்ளைகள் தான்ஒரு கட்டத்தில் கிடைக்கும் வெளிஅன்புக்குள் தங்களை புதைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

இது செல்போன் யுகம். `காதலிக்கலாமா வேண்டாமா' என்ற இரு மனநிலையில் இருக்கும் பெண்களைக் கூட செல்போன் அடித்து வீழ்த்தி விடுகிறது. நகர வாழ்க்கையில் வீட்டில் தனியறை வாய்க்கப் பெற்ற காதல் ஜோடிகள் படுக்கையில் படுத்தபடி விடிகாலை 4 மணி வரை விடிய விடிய பேசி காதல் வளர்ப்பதே அவர்கள் ஓடிப்போனபிறகு தான் பல பெற்றோருக்குத் தெரிய வரும்.

பல பெற்றோருக்கு குடும்ப சூழல், வருமான நெருக்கடி இதெல்லாம் வளரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் மீது கவனம் பதிக்கத் தவறி விடுகிறது. `நம்ம வீட்டுப் பிள்ளைகள் நல்லவர்கள். நாம் கிழித்தகோட்டை தாண்டாதவர்கள்' என்ற அதீத நம்பிக்கை கடைசியில் ஒருநாள் பிள்ளைகள் கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போகும் போதுதான் உடைந்து நொறுங்குகிறது.

பிள்ளைகள் வளர வளர அவர்கள் மீதான பெற்றோர் அக்கறை அதிகரித்தாக வேண்டும். அந்த அக்கறை அன்பு கலந்ததாக `உனக்கு நானிருக்கிறேன்' என்று உணர்த்துவதாக இருக்க வேண்டும். வீட்டில் அன்பு கிடைக்காதபோதுதான் பலரும் அந்த அன்பை வெளியில் தேடிக் கொள்கிறார்கள். அதில் உச்சகட்ட அன்பாக காதல் அமைந்து கடைசியில் குடும்பத்தையே துச்சமாக கருதி வீட்டைவிட்டு ஒடிப்போகும் அளவுக்கு கொண்டு விட்டு விடுகிறது.

2 comments:

நிலாமதி said...

உண்மை தான் நாடில் நடப்பதை சொல்கிறீர்கள். சில பள்ளி நட்பு காதலாகி விடுவதும் உண்டு . இப்போதெலாம் நம்ம பசங்க பொண்ணுங்க சமர்த்து ........எங்கே வசதி இருக்கோ அங்கே காதல் முளைக்கிறது .விவரம் தெரிஞ்ச ஆட்களாய் இருக்காங்க. உங்க பதிவு நன்றி இருக்கிறது பாராடுக்கள். உங்கமனம் திறந்த பதிவுக்கு நன்றி .நட்புடன் நிலாமதி

Unknown said...

nalla pathivu nanba wellcom

Post a Comment