Pages

04 August 2009

செங்க தேச்சி குளிச்சாலும் செவக்கவா போறே


மனித உடலின் பாதுகாப்பு கவசமாக செயல்படுவது தோல். புறத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பது, உட்புறம் உருவாகும் கழிவுகளை வெளியேற்றுவது போன்ற செயல்களில் தோல் முக்கிய பங்கு வகிக்கிறது.

சுற்றுப்புற சூழல் மற்றும் சூரியக் கதிர் தாக்குதல் ஆகியவற்றால் தோல் பகுதி பாதிப்பு அடைகிறது. இதனால் பரு மற்றும் கொப்புளங்கள் தோன்றுகின்றன. இதுதவிர தீக்காயம் மற்றும் விபத்துகளாலும் தோல்பகுதி மிகவும் சேதமடைகிறது.

இப்படி பல்வேறு காரணங்களால் தோல்கள் பாதிக்கப்படுவதால் தோற்றப் பொலிவு குறைவு உள்ளிட்ட பல இழப்புகள் ஏற்படுகின்றன. இதைச் சமாளிக்க சில கிரீம்கள், அறுவைச் சிகிச்சை முறைகள் புழக்கத்தில் உள்ளன.

தீக்காயம் மற்றும் விபத்துகளால் பாதிப்பு ஏற்படும்போது தோல் பகுதி கருகியோ, கிழிந்தோ பலத்த சேதம் அடைகிறது. இதைச் சரி செய்வதற்கு தோல் தானம் பெற்று அறுவைச் சிகிச்சை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. இருந்தாலும் தேவையான வேளைகளில் போதுமான அளவு தோல் கிடைப்பது இல்லை. மேலும் விலையும் அதிகமாக இருக்கும்.

இந்த இழப்புகளையெல்லாம் ஈடு செய்ய, நவீன தொழில்நுட்பத்தில் செயற்கைத் தோல் உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளனர் விஞ்ஞானிகள். ஜெர்மனியைச் சேர்ந்த பிரான்கோபர்- ஜெசல்ஸ்சாப்ட் அறிவியல் மையம் இந்த செயற்கை தோல் தயாரிப்பில் வெற்றி கண்டுள்ளது.

அகன்ற பாத்திரத்தில் ரத்தத் தட்டுகளை ஆய்வக முறையில் வளர்த்து தோல் உற்பத்தி செய்கிறார்கள். நன்கு வளர்ந்த உடன் காளான் அறுவடை செய்வதுபோல் தோலையும் பிளேடால் அறுவடை செய்து சேமிக்கிறார்கள். பல்வேறு மனிதர் களின் தோலை ஆய்வுக்கு உட்படுத்தி, 19 விதமான நிறங்களில் தோல் உற்பத்தி செய்து உள்ளனர்.

இந்த செயற்கைத் தோலை மிருகங்களுக்கு பொருத்தி ஆய்வு செய்ததில் வெற்றி கிடைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் அடுத்த ஆண்டு (2010) முதல் செயற்கைத் தோலை விற்பனைக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்து உள்ளது. முதல் முறையாக 5 ஆயிரம் சிறு துண்டு தோல்கள் விற்பனைக்கு விட்டு வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது. இந்த தோல் மொத்தமாக 600 சதுர அங்குல அளவு இருக்கும். 0.12 அங்குல அளவுடைய தோலின் விலை சுமார் ரூ.2 ஆயிரத்து 500 (49 டாலர்கள்) ஆகும்.

"நீ இருக்க நிறத்துக்கு வெயிலில் அலைஞ்சாலும் கறுக்கவா போறே, செங்க தேச்சி குளிச்சாலும் செவக்கவா போறே'' என்று கிண்டலாக பேசுவது இனி குறையலாம். ஏனெனில் வசதி இருந்தால் பிடித்த நிறத் தோலாக மாற்றிக் கொள்ளலாமே!?

No comments:

Post a Comment