Pages

27 July 2009

இந்திய கடலோர காவல்படை மீது சிங்கள கடற்படை தாக்குதல்

இராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று படகு பழுதானதால் கச்சதீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் சிங்கள கடற்படை தாக்குதல் நடாத்தியது.

சதீஷ், ஜோசப், அந்தோண், முனியசாமி ஆகியோரை மீட்க, மீன் துறை அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலையில் இரண்டு படகில் மீனவர்கள் 10 பேர் சென்றனர்.கச்சதீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன் துறையில் அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து கச்சதீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தபோது ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர். இந்நேரத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள், ஹோவர் கிராப்ட் கப்பலை நோக்கி வேகமாக வந்தன. கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் இருந்த இந்திய கடலோர காவல்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே ஹோவர் கிராப்ட் கப்பல் அருகில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினரை விசாரித்து விட்டு திரும்பினர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைப் பார்த்த மீனவர்கள் பயந்துபோய் தங்களது படகின் அடியில் ஒளிந்து கொண்டனர். கடற்படையினர் சென்றதும் படகை மீட்டு வெள்ளிக்கிழமை இரவில் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

மீனவர்கள் கூறுகையில்; இந்திய கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கிய படி நின்றனர். என்ன நடக்கிறது என்பது தெரியாததால் நாங்கள் படகுக்குள் ஒளிந்து கொண்டோம். இந்திய கடலோர காவல் படைக்கே இந்த நிலை என்றால் எங்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? எனத் தெரியவில்லை என்றனர். நடுக்கடலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து மத்திய மாநில புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment