Pages

24 July 2009

மருத்துவமனையாகிறது முதல்வர் இல்லம்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லம் எதிர்காலத்தில் இலவச மருத்துவமனையாகச் செயல்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ‘உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்ட' தொடக்க விழா உரையின் நிறைவாக, முதல்வர் செய்த அறிவிப்பின் விவரம்:-

‘‘இன்றைய விழாவில் உங்களில் ஒருவன் என்ற முறையில் என் சார்பாக ஓர் அறிவிப்பைச் செய்ய விரும்புகிறேன்.

பொது வாழ்க்கை என்பது புனிதமானது. அது என்றும் தூய்மையானதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான்.

நான் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பும், பின்பும் என் பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்று பார்த்தால் - கோபாலபுரத்தில் நான் வசிக்கும் ஒரு வீடும் (நற்ழ்ங்ங்ற் ஏர்ன்ள்ங்) (இந்த வீட்டின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி), திருவாரூருக்கு அருகில் காட்டூர் கிராமத்தில் 14 ஏக்கர் நிலமும்தான் உள்ளது.

இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெருவிலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதல் அமைச்சரின் வீடு இருப்பது என்று எடுத்துக் கொண்டால், அது என்னுடைய வீடாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நேரத்தில் எல்லாம், இப்போது கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்குப் பதிலாக அரசு பங்களா ஒன்றில் வசிக்க வீடு ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

வரும் பார்வையாளர்களையும் வெளிநாட்டினரையும் என் இல்லத்தில் வரவேற்றுப் பேசுவதற்குக்கூட போதுமான அளவுக்கு இடம் கிடையாது. புகைப்படக்காரர்கள் நின்று படம் எடுக்கக்கூட வசதி இல்லாத நிலை என்பதை தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள்.

இலவச மருத்துவமனை: கோபாலபுரத்தில் நான் வசிக்கும் இந்த இல்லத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு, 1968 - ல் என் பிள்ளைகளின் பெயரில் செட்டில்மென்ட் எழுதி பதிவு செய்துள்ளேன்.

இப்போது அந்த இல்லத்தினை என்னுடைய காலத்துக்குப் பிறகும், என் மனைவியின் காலத்துக்குப் பிறகும் தமிழக அரசுக்கோ அல்லது கலைஞர் அறக்கட்டளைக்கோ உடைமையாக்குவதென்றும், அந்த இல்லத்தில் ஓர் இலவச மருத்துவமனையினை என் தாய் - தந்தையர்களான அஞ்சுகம் - முத்துவேலர் பெயரில் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளேன்.

இதற்கு என் மனைவி, பிள்ளைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார் முதல்வர் கருணாநிதி.

No comments:

Post a Comment