18 June 2009

மு.க.ஸ்டாலினை பாராட்டி எஸ்.வி.சேகர்

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சபை ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்ச்சியாக இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவை முன்னவர் நிதியமைச்சர் க.அன்பழகனை பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அழைத்தார். அவர் எழுந்து பேசுவதற்கு முன்னதாக, அ.தி.மு.க. தரப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொறடா செங்கோட்டையன் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். எஸ்.வி.சேகர் மட்டும் உட்கார்ந்திருந்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். செங்கோட்டையன் தனக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் அனுமதி தரப்படவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோடு பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு, இந்திய கம்யுனிஸ்டு, ம.தி.மு.க. கட்சி எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்றனர்.

அரசுக்கு எதிராக திருத்தணி எம்.எல்.ஏ. அரி (அ.தி.மு.க.) கோஷமிட மற்ற எம்.எல்.ஏ.க்கள் அதை திரும்பக் கூறினர். சில நிமிடங்கள் இந்த பிரச்சினை நீடித்தது. அனைவரையும் உட்காரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக சில குற்றச்சாட்டுகளைக் கூறி கோஷமிட்டபடி எஸ்.வி.சேகரைத் தவிர அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேறினர். அதைத் தொடர்ந்து பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு, இந்திய கம்யுனிஸ்டு, ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவை முன்னவர் க.அன்பழகன் பேசினார். துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை நியமித்தது தொடர்பாக அவரை வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகரை பேச சபாநாயகர் அழைத்தார்.

எஸ்.வி.சேகர் பேசும் போது, "மிகவும் தகுதி வாய்ந்த பொறுப்புக்கு தகுதி வாய்ந்த எனது நண்பர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்'' என்று பேச்சை தொடங்கினார்.

இதை வாழ்த்தைக் கேட்டதும் ஏற்கனவே வெளிநடப்பு செய்திருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபைக்குள் ஓடோடி வந்தனர்.

`எந்த அடிப்படையில் இவன் பேசுகிறான்? கட்சி கொறடாவின் அனுமதி பெறாமல் எப்படி பேச முடியும்? எதை வைத்து இவனை பேச அனுமதித்தீர்கள்? இவன் ஒரு துரோகி. இவனை பேச அனுமதிக்கக்கூடாது' என்று சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் கூறினர்.

அப்போது எஸ்.வி.சேகர் இருக்கையைச்சுற்றி, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வி.பி.கலைராஜன் (தியாகராயநகர்), சி.வி.சண்முகம் (திண்டிவனம்) உட்பட சில எம்.எல்.ஏ.க்கள் நின்றனர். `துரோகியே' என்று முகத்துக்கு நேராக கை நீட்டி சில எம்.எல்.ஏ.க்கள் எஸ்.வி.சேகரை திட்டினர்.

`இனிமேல் இவன் பேச எழுந்தால், அடியுங்கள்' என்று சில எம்.எல்.ஏ.க்கள் கூறினர். இந்த வார்த்தைகளை கேட்ட எஸ்.வி.சேகர் மனம் வருந்தினார். ஒரு கட்டத்தில் நிற்க முடியாமல் சோர்ந்து இருக்கையில் உட்கார்ந்துவிட்டார்.

இந்த விவகாரம் பற்றி பேசுவதற்கு எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கொறடா செங்கோட்டையன் ஆகியோர் அனுமதி கேட்டனர். அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார். அனைவரும் அவரவர் இருக்கைக்கு செல்லும்படி அவர்களை கேட்டுக்கொண்டார்.

எஸ்.வி.சேகர் பேசியதாவது:-

ஒரு அரசியல் நாகரீகத்துக்காகத்தான் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்தேனே தவிர வேறொன்றுமில்லை. இந்த சட்டமன்றத்தை பல்வேறு கருத்துகளை உடையவர்கள்தான் அலங்கரிக்கின்றார்கள். நான் புரட்சித்தலைவி தலைமையில் உள்ள அ.தி.மு.க சார்பாக இரட்டை இலை சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றேன் என்பது மறுக்க முடியாத ஒரு விஷயம்.

ஆனால் அதே சமயம் மாற்றுக்கருத்து உடையவர்கள் இங்கே எதையுமே சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை இருக்குமானால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் செய்ய முடியாமல் போய்விடுமானால் அதை இந்த ஜனநாயகத்தில் மக்களுக்கு செய்யக்கூடிய துரோகமாக நான் நினைக்கிறேன்.

No comments:

Post a Comment