Pages

18 June 2009

தமிழக அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட ரூ.15 லட்சம் கடன்

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கப்படும் கடன்தொகை 6 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை பேரவையில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி நேற்று தெரிவித்தார்.




மின்சாரம், பணியாளர் & நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது: தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை இருக்கிறது. இதைப் போக்க முதல்வர் கருணாநிதியும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். மத்திய
அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் மூலம் மின்சாரம் வாங்கி, மின்பற்றாக்குறையை சமாளித்து வருகிறோம்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் யூனிட், இந்த ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது யூனிட், அடுத்த ஆண்டு ஏப்ரலிலும் செயல்படத் தொடங்கும்.
2012ம்ஆண்டுக்குள் தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளது.


6வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழக அரசு ஊழியர்களை விட கூடுதலாக 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் புதிய சம்பள விகிதம் அறவிக்கப்படும்.
மின்வாரியத்தை பிரிக்கவில்லை என்றால், உதவித்தொகை தர முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. அதனால்தான் மின்வாரியம் பிரிக்கப்படுகிறது.

‘தமிழ்நாடு மின்சார வாரியம் லிமிடெட்’ என்ற ஒரு நிறுவனம், ‘தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் லிமிடெட்’ ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் லிமிடெட்’ ஆகிய 2 துணை நிறுவனங்களும் நிறுவப்படும். அவை முழுமையாக தமிழக அரசின் நிறுவனமாக செயல்படும். மின்சார வாரியம் தனியார் மயமாகாது.

அரசு ஊழியர்கள் வீடு கட்ட அரசு இப்போது அதிகபட்சமாக ரூ.6 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது. இது 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வீடு கட்ட கடன் தொகை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு பிறப்பித்துள்ளார்.

மின்வாரியத்தில் 21,600 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 12,000 பேர் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதியுள்ள 9,600 பேர் வரும் ஆண்டு ஏப்ரலில் இருந்து நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய உடல் நலக்காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாத சந்தா ரூ.25 செலுத்த வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களுக்கு 2 லட்சம் கிடைக்கும். தகுதியுள்ளவர்கள் தங்கள் பணிக்காலம் முழுவதும் இந்த தொகையை பெறலாம்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் கடந்த ஆண்டு வருவாய் ரூ.19,508 கோடி. செலவு ரூ.22,612 கோடி. பற்றாக்குறை ரூ.7,100 கோடி. மொத்த மின் உற்பத்தியில் 46 சதவீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. 54 சதவீத மின்சார விநியோகத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின்கட்டணம் மிகவும் குறைவு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை, மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

No comments:

Post a Comment