Pages

20 May 2009

பிரபாகரன் மரணம் உறுதிசெய்யப்படவில்லை: கருணாநிதி

பிரபாகரன் மரணம் உறுதி செய்யப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

டில்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். பிரதமர் உடனான சந்திப்பில் இலங்கை நிலவரம் குறித்து விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், இதற்கு மேல் கருத்துக்கள் எதுவும் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அவர் நேற்று மாலையில் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் விவரமும் வருமாறு:-

கேள்வி:- கடந்த முறை தி.மு.க.வுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கிடைத்த அளவுக்கு 7 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

பதில்:- வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பது இப்போது தெரியாது. கிடைத்த பிறகுதான் வாய்ப்பு இருந்ததா இல்லாமல் போயிற்றா என்று என்னால் சொல்ல முடியும்.

கேள்வி:- பிரதமருடனும், சோனியா காந்தியுடனும் என்ன பேசப்பட்டது என்று கூற முடியுமா?

பதில்:- நாங்கள் பொதுவாக மத்தியில் இருந்த ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை எந்த அளவுக்கு அணுகுவது - எப்படி தீர்த்து வைப்பது என்பது பற்றியெல்லாம் பேசினோம்.

கேள்வி:- நாளைக்கும் பேச்சு வார்த்தை நடக்குமா?

பதில்:- நாளைக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் உள்ளது.

கேள்வி:- ராஜபக்சே தலைமையிலான அரசு, தமிழ் மக்களுக்கு சமஉரிமை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

பதில்:- இந்திய அரசு குறிப்பாக, பிரதமர் மன்மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இவர்கள் எல்லாம் அழுத்தந்திருத்தமாக அங்குள்ள தமிழர்களின் உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும்- சமநிலையிலே இலங்கையில் வாழ்கின்ற மக்கள், சிங்களவர்கள் ஆனாலும், தமிழர்கள் ஆனாலும் வாழவேண்டும், அதற்கான வழிவகைகளை காணவேண்டும் என்று கூறி வந்திருக்கிறார்கள். அதை மீண்டும் அவர்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறேன். பேச்சுவார்த்தையில் கூட சோனியா காந்தி அம்மையாரிடமும், டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடமும் நினைவுபடுத்தியிருக்கிறேன்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் குடிமக்களுக்கு புதுவாழ்வு உருவாகிட நிவாரணங்கள் இவைகளையெல்லாம் செய்வதற்கு வேகமாக புதிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், செயல்படவேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர்களும் என்னுடைய கருத்தை ஆதரித்து நிச்சயமாக அந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.

கேள்வி:- பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

பதில்:- நான் சொன்ன பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

கேள்வி:- தமிழ் ஈழம் அமைய இலங்கையில் வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றுதான் ஒரு விடுதலை இயக்கமாக ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் ஒரு இயக்கம் தோன்றியது. ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக தோன்றிய இயக்கம் இடையில் பல்வேறு திசைகளில் திரும்ப நேரிட்டு இன்றைய தினம் ஒரு கேள்விக்குறியாக ஆகியிருக்கின்றது. எதுவும் நடக்காமல் போய்விடும் என்று நினைக்க தேவையில்லை. நாம் உறுதியோடு மேற்கொண்ட முயற்சிகள் நிச்சயமாக வெற்றி பெறத் தவறுவதில்லை.

கேள்வி:- விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். இனியாவது அங்கே தமிழ் மக்களுக்கு அமைதி கிடைக்குமா?

பதில்:- அமைதியை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம் என்று இந்திய நாட்டின் தலைவர்கள் குறிப்பாக சோனியா காந்தி அம்மையாரும், மன்மோகன் சிங் அவர்களும் என்னிடத்திலே இன்றையதினம் கூறியிருக்கின்ற காரணத்தால் அதற்கான வழிவகை காணவும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் தி.மு.க. வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.

கேள்வி:- இலங்கையில் இந்தியா தலையிடுகின்ற வகையில் இந்திய வெளியுறவு துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கேட்பீர்களா?

பதில்:- வெளியுறவு துறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று கேட்பதற்கான திட்டம் ஒன்றும் தயாராக இல்லை.

கேள்வி:- ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய மந்திரி ராசாவுக்கு மந்திரி சபையில் மீண்டும் இடம் வழங்க வேண்டும் என்று கேட்பீர்களா?

பதில்:- வருமானத்துக்கு மேல் 60 கோடி ரூபாய் சொத்து சேர்த்து, அதற்கான வழக்கு இன்றைக்கும் பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் உள்ளவருக்கு பிரதமர் பதவி வேண்டும் என்று நீங்கள் எல்லாம் பிரசாரம் செய்யலாம், ஆனால் திட்டமிட்டு வேண்டும் என்றே குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்பட வேண்டுமா?

கேள்வி:- 2004-ம் ஆண்டு தேர்தலின்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் குறைந்த பட்ச செயல் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு, அந்த திட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்தினார்கள். அதைப்போல இப்போது செய்யப்படுமா? அப்படி என்றால் அதிலே தமிழ்நாட்டின் சார்பில் என்னென்ன திட்டங்கள் சேர்க்கப்படும்?

பதில்:- தமிழ்நாட்டுக்கு ஏராளமான திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் இந்த மாதம் 10-ந் தேதி அன்று சென்னையில் தீவுத்திடலில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கூட என்னென்ன திட்டங்கள் என்பதைப் பற்றி எல்லாம் வரிசைப்படுத்தி ஏறத்தாழ 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

மிகப் பெரிய திட்டமான சேது காய்வாய் திட்டம் - அந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்து, அந்த பணி இப்போது பாதியில் நிற்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். ஆனால் அந்த சேது திட்டத்தை ரத்து செய்யப்போவதாக ஒரு அம்மையார் தேர்தல் அறிக்கையில் தைரியமாக வெளியிட்டதையும் நீங்கள் அறிவீர்கள்.

பொதுவாக அரசியல் கட்சிகள் திட்டம் வேண்டும் என்று தான் கேட்போம். ஆனால் ஒரு கட்சி சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்வோம் என்று சொல்லி வாக்கு கேட்ட விந்தையை இப்போது தான் பார்த்தோம்.

கேள்வி:- தமிழ்நாட்டில் உள்ள மின்சார பற்றாக்குறை நிலையைப் போக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது?.

பதில்:- தொடர்ந்து அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இடைக்காலத்தில் ஐந்தாண்டு காலம் தி.மு.க. ஆட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பற்றுப்போன அந்த நேரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவொரு மின்சார உற்பத்தி திட்டத்தையும் தொடங்கவில்லை. ஆனால் இப்போது பல திட்டங்கள் நிறைவேற்றப்படக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது. எனவே, எதிர் காலத்தில் மின்சார பற்றாக்குறை பற்றிய கவலை ஏற்படாது.

No comments:

Post a Comment