Pages

12 May 2009

பழ. நெடுமாறன், பாரதிராஜா உள்படபல பேருக்கு ஜாமீனில் விடுதலை.


சோனியாகாந்திக்கு கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் கைதான பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 180 பேர் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

சென்னையில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா வந்தார்.

இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டை மறைமலைஅடிகளார் பாலத்தின் அருகில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டைரக்டர் பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 67 பேரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 113 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் வக்கீல் சங்கரசுப்பு உள்பட வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு பெஞ்ஜமின் ஜோசப் முன்பு வந்தது. அப்போது பாரதிராஜா உள்பட கைதானவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், "இந்த கைது முறையாக செய்யப்படவில்லை. மேலும், இவர்களை தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுக்கவே சிறையில் அடைத்து உள்ளனர். எனவே இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்'' என வக்கீல்கள் கோரினார்கள்.

அரசு தரப்பு வக்கீல் பன்னீர்செல்வம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். "கைது பற்றி முறையாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை விடுதலை செய்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும்'' என வாதிட்டார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு, டைரக்டர் பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 180 பேரையும் ரூ. 5 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

டைரக்டர் பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 180 பேரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது. மேலும், தேர்தலில் வன்முறை ஈடுபடமாட்டோம் என்று பிரமாண ஒப்புதல் வாக்கு மூலத்தை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தீர்ப்பில் மாஜிஸ்திரேட்டு பெஞ்ஜமின் ஜோசப் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment