03 May 2009

கோவையில் 5 ராணுவ லாரிகளுக்கு தீவைப்பு


ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் கோவை வழியாக கொச்சி துறைமுகம் மூலம் சிறிலங்காவுக்கு 80 பாரஊர்திகளில் ஆயுதங்கள் அனுப்பப்படுவதாகப் பரவிய செய்திகளையடுத்து கோவை அருகே நீலம்பூர் என்ற இடத்தில் இந்தியப் படையினருக்குச் சொந்தமான 5 பார ஊர்திகளை பொதுமக்களும், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் முற்றுகையிட்டுத் தாக்கினார்கள். ஆனால், ஆயுதங்கள் எதுவும் கடத்தப்படவில்லை என படை விளக்கமளித்துள்ளது.

கோவையை அடுத்த நீலம்பூர் புறவழிச் சாலை வழியாகக் கடந்த சில நாட்களாகவே படையினரின் பாரஊர்திகள் அதிக எண்ணிக்கையில் வந்து சென்றிருக்கின்றன. அந்த ஊர்திகள் மூலம் வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம், சேலம், கோவை வழியாகக் கொச்சி துறைமுகத்திற்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சிறிலங்காவுக்கு கடல் வழியாக அனுப்பப்படுவதாக செய்திகள் பரவின.

இதனை அறிந்ததும் பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டினண் தலைமையில் நீலம்பூர் புறவழிச்சாலையில் இன்று சனிக்கிழமை பிற்பகலில் கூடினர்.

பிற்பகல் 3:40 நிமிடத்துக்கு அந்த வழியே 5 படையினரின் பாரஊர்திகள் ஒன்றாக வந்தன. அவற்றை பெரியார் தி.க.வினரும், பொதுமக்களும் மறித்தனர்.

முதல் பாரஊர்தியின் ஓட்டுநரை சிலர் தாக்கினர். இதனால் அச்சமடைந்த 5 பாரஊர்திகளின் ஓட்டுநர்களும் அவர்களின் உதவியாளர்களும் அங்கிருந்து தப்பியோடி, மதுக்கரையில் உள்ள படை முகாமுக்கு செய்தி தெரிவித்தனர்.

இந்நிலையில் சிலர் லாரிகளுக்குத் தீவைத்தனர். இதில் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன. இதையடுத்து ராணுவ வீரர்கள் லத்திகளுடன் கீழே இறங்கி தாக்குதலில் ஈடுபட்டவர்களை மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர். சரமாரியாக கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் தடிகளால் அடித்து விரட்டினர். இதில் பத்திரிக்ûகாயளர்களும் பலர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அந்தப் பகுதியே கலவரம் நடந்த பகுதி போல காணப்பட்டது. ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உட்பட 200 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராணுவ வாகனங்களைத் தாக்கியதும், ராணுவ வீரர்களைத் தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை காவல்துறை கூடுதல் இயக்குநர் கூறுகையில், இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக ராணுவ வாகனங்களை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கியுள்ளனர். அக்கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் வாகனத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment