Pages

02 May 2009

கறுப்புப்பணப் பதுக்கல். காங்கிரஸின் கள்ளத்தனம்- குருமூர்த்தி!

எமர்ஜென்சி, ஜனதா கட்சியின் சிதைவு, இந்திராகாந்தியின் மரணம், போஃபர்ஸ், பாபர் மசூதி-ராமர் கோயில்-அயோத்தி... என்று ஏதாவது ஒரு பெரிய பிரச்னையை முன் வைத்தே இதுவரை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. இந்தப் பொதுத்தேர்தலில் அப்படி என்ன ராட்சஷ பூதமும் கிளம்பவில்லை. ஆனால் அதற்கு பதிலாக பாதாள பைரவி போல் 'கறுப்பு பணம்' என்ற பூதம் கிளம்பியிருக்கிறது.

'சுவிஸ் வங்கி போன்ற வெளிநாட்டு ரகசிய வங்கிகளின் லாக்கர்களில் உறங்கிக்கொண்டிருக்கும் எழுபது லட்சம் கோடி ரூபாய் என்ற கறுப்பு பண பூதத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவோம்' என்று பி.ஜே.பி. தொடர்ந்து அனல் கக்குவதுடன், இதை நாடு தழுவிய தேர்தல் பிரச்னையாகவும் மாற்றப்பிரயத்தளப்பட்டு வருகிறது. அதற்காகவே, இந்த பிரச்னையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய... நான்கு பேர் கொண்ட உறுப்பினர் குழுவையும் அமைத்திருக்கிறது. இதில் சென்னையை சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி முக்கியமானவர். அவரை சந்தித்தோம்.

''மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,'வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர அரசு முயற்சி எடுத்துவரும் வேளையில்... பி.ஜே.பி.ஒலிபெருக்கி வைத்துக் கூப்பாடு போடுகிறது. 'போலீஸ் வருகிறது. ஓடிப்போ!'' என்று திருடனை உஷார்படுத்தவது மாதிரி பி.ஜே.பி., யாரையோ உஷார்படுத்தத்தான் இப்படி செய்கிறது' என்ற பொருளில் கறுப்புப்பணம் குறித்த எங்களுடைய வாதங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

ஜெர்மன் முன் வந்தது: ஜெர்மன் நாட்டுப்பணத்தை அந்த நாட்டின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ரகசிய வங்கியான எல்.ஜி.டி. வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் தகவல் சென்ற ஆண்டே வெளியாகிவிட்டது. சிதம்பரம் சொல்வது மாதிரி திருடர்கள் உஷராகியிருந்தால், அப்போதே உஷாராகியிருப்பார்கள்! அதனால், 'திருடனைப் பிட. அவனிடமிருக்கும் பணத்தைக் கைப்பற்று!' என்று அரசாங்கத்திடம் மகஜர் கொடுப்பது, திருடனை உஷார்படுத்துவது ஆகாது. சிதம்பரத்திடம் நான் ஒரு விஷயம் கேட்கிறேன். ரகசிய வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறவர்களின் பட்டியல் ஒன்றை வங்கியின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கிய ஜெர்மன் அதிகாரிகள், அந்தப் பட்டியலை இந்தியா உட்பட சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளுக்கும் கொடுக்க முன்வந்தார்கள். அத்வானியும்,'அதை கேட்டு வாங்குங்கள்!' என்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், என்ன நடந்தது? நம்நாட்டின் நிதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், 'அந்தப் பட்டியலைக் கேட்டு ஜெர்மன் அரசைத் தொந்தரவு செய்யாதீர்கள். நாம் அப்படிக்கேட்பதை அவர்கள் தொல்லையாக எடுத்துக்கொண்டால்... இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு கெட்டுப் போகலாம்!' என்று ஜெர்மன் நாட்டில் இருக்கும் இந்திய தூதருக்கும் கடிதம் எழுதுகிறார்.

சரி... அதை விடுங்கள்! இந்த ஆண்டு வளர்ச்சியடைந்த நாடுகளின் அமைப்பான ஜி-20 மாநாட்டில் இந்தப் பிரச்னை பற்றிப் பேசுங்கள் என்று அத்வானி பிரதமரை வலியுறுத்தினார். நடந்தது என்ன? ஜி-20 மாநாட்டுக்கு முன் நடக்கும் பூர்வாங்கக் கூட்டத்தில் அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் சுவிஸ் வங்கி மாதிரியான ரகசிய வங்கிகளைக் கண்டித்து காரசாரமாகப் பேசின. வாடிக்கையாளர்களின் ரகசியம் காக்கிறோம் என்ற பெயரில் கறுப்புப் பண முதலைகளுக்கத் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்தால், அத்தகைய நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற வற்புறுத்தின. முதலாளித்துவ நாடுகளே எதிர்த்தும்... அந்த வங்கிகளை வைத்திருக்கும் நாடுகளைப் பற்றியும் காரசாரமாகப் பேசின. ஆனால், அந்த அவையில் வளரும் நாடான நம்முடைய இந்தியாவின் பிரதிநியாக அமர்ந்திருந்த திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா ஊமை மாதிரி வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

காங்கிரஸ் விரும்பவில்லை: லண்டன் மாநகரத்தில் நடைபெற்ற ஜி-20 கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்றபோதும் அங்கும் அதே கதைதான். போஃபர்ஸ் பீரங்கி ஊழல் விஷயத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த குவாத்ரோச்சியிடமிருந்து கைப்பற்றிய கோடிக்கணக்கான பணத்தை வேண்டுமென்றே கோட்டைவிட்ட கட்சித்தானே காங்கிரஸ்? சுவிஸ் வங்கி மாதிரி ரகசிய வங்கிகளிலிருந்து பணத்தை மட்டுமல்ல... பட்டியலைக்கூட இந்தியாவுக்கு கொண்டு வர காங்கிரஸுக்கு துளியும் விருப்பமில்லை. காரணம். அந்த கட்சியின் முதலாளிக்கும் இந்த மாதிரி ரகசிய வங்கிளுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது.

பி.ஜே.பி., சி.பி.ஐ., சி.பி.ஐ.எம்., அ.தி.மு.க., என்று பல கட்சிகளும் ரகசிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பணத்தை வெளியே கொண்டுவருவோம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்க... காங்கிரஸ் மட்டும் திருடனுக்க தேள் கொட்டிய மாதிரி மௌனமாக இருக்கிறது. பி.ஜே.பி. எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பிரதமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் தொடங்கி கபில்சிபில், ஜெயராம்ரமேஷ், அபிஷேக் சிங்வி என்று ஒரு பட்டாளத்தையே களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் சோனியா காந்தி.

சால்ஜாப்பு: இவர்களில் ஒருவர் பி.ஜே.பி. எழுப்பும் முக்கியமான கேள்விக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு, 'வெளிடாடு ரகசிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியப்பணம், அத்வானி சொல்வதுமாதிரி, எழுபது லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்காது. வெறும் 25 லட்சம் கோடி ரூபாய்தான் இருக்கும்'என்ற சால்ஜாப்பு சொல்கிறார் 'பி.ஜே.பி. ஆட்சியில் இந்தப்பணத்தை வெளியே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே?' என்று இன்னொருவர் கேட்கிறார். பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் எவ்வளவு இருந்தால் என்ன? அதனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னால், இத்தனை கோடிகள் அல்ல.. என்று கணக்குச் சொல்லி, பிரச்னையை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதே நேரம், இந்த மாதிரி விஷயங்களுக்காக பி.ஜே.பி. தரப்பிலிருந்து வெளிப்படையான விவாதங்களுக்கு வாருங்கள் என்று கூப்பிட்டால், வர மறுக்கிறார்கள். மடியில் கனம் இருப்பதால்தானே, இதற்கெல்லாம் தயங்குகிறார்கள்? இந்த திசைதிருப்பல் நாடங்களை யெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ரொம்ப காலத்துக்கு மக்களை காங்கிரஸ் தரப்பு ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. என்றார்.

நன்றி - ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment