17 April 2009

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை


சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

* ஒளிவு மறைவற்ற, குடிமக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடிய, நேர்மையான, மதச் சார்பற்ற, ஆற்றல் மிக்க நிர்வாகத்தை இந்திய மக்களுக்குத் தர அ.தி.மு.க. உறுதி அளிக்கிறது.

* மத்திய அரசின் நிதி நிர்வாகத்தில் ஓர் ஒழுங்கு முறையை அ.தி.மு.க. திரும்ப உருவாக்கும்.

* மக்களிடம் அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்த உறுதியளித்தல்.

* மாத வருவாய் பெறும் அனைத்துப் பணியாளர்களுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளித்தல்.

* மற்ற பிரிவினருக்கு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

* வரம்பு பயன் வரி மற்றும் வங்கி பண மாற்ற வரி ஆகியவை நீக்கப்படும்.

* சில்லறை வியாபாரம், கட்டுமானம் மற்றும் உயர் கல்வித் துறைகளில் நேரடி வெளிநாட்டு முதலீடு இருக்காது. காப்பீட்டுத் துறையில் தற்போதுள்ள நேரடி வெளிநாட்டு முதலீட்டு முறை தொடரும்.

* விவசாய விளை நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படமாட்டாது.

* அனைத்து முக்கிய மாநகரங்களையும் இணைக்கும் புல்லட் ரெயில் திட்டத்தை சர்வதேச அளவிலான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வசதிகளுடன் அ.தி.மு.க. விரைவுபடுத்தும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் மின் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல். காற்று, சூரிய சக்தி மற்றும் பிற மரபு சாரா மின் திட்டங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரிடம் அநியாய வட்டி வசூலிக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஓய்வூதிய நிதி நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படமாட்டாது. மேலும், ஓய்வூதிய நிதி பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.

* எந்தவித பயனுமின்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குச் சொந்தமானப் பணத்தை (7.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது) பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* வரி ஏய்ப்பு செய்வோர், கள்ளச் சந்தைப் பேர்வழிகள், பதுக்கல்காரர்கள் மற்றும் ழூக பேரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* ஏழைகளுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையில் துளிகூட அச்சம் இன்றி தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மீது, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் இந்த அமைப்புகளின் மீது அ.தி.மு.க. மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

* மத்திய அரசுப் பணிகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்போது காலியாக உள்ள 6 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.

* மத்திய அரசுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் 5 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

* தபால் துறையில் பணிபுரியும் 3 லட்சம் மிகைத் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் புனரமைக்கப்பட்டு தேசிய ஊரக மேம்பாட்டுத் திட்டம் என மாற்றப்படும். இத்திட்டத்தின் கீழ் 75 சதவீதம் பொருளாகவும், 25 சதவீதம் பணமாகவும் வழங்கப்படும்.

* ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 5 நாட்கள் பணிபுரிவோருக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு வகைகள், 1 கிலோ சமையல் எண்ணெய், 5 லிட்டர் மண்ணெண்ணெய் கொண்ட தொகுப்பு வழங்கப்படும்.

* வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், தினந்தோறும் அவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரம் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும்.

* சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஏராளமான பாதுகாப்புகள் அடங்கிய கடுமையான தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படும்.

இந்தியாவில் தங்கியிருப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டினர் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்கள் கவுரவமாக வெளியேற்றப்படுவார்கள்.

* நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நீடித்து வரும் ராமர் கோயில் பிரச்சினைக்கு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண அ.தி.மு.க. முனையும். இந்தப் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைய நேரிட்டால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இறுதி முடிவாக ஏற்றுக்கொண்டு அதன்படி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

* இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலையை நிறுத்தவும் அ.தி.மு.க. உடனடியாக கோரிக்கை விடுக்கும்.

* பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

* இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக தனி ஈழ மாநிலம் அமைக்க அ.தி.மு.க. வலியுறுத்தும்.

* அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

* தமிழ் உட்பட எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கவும், அத்துடன் நேரு அளித்துள்ள உறுதிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அரசிடம் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

* மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.

* கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

* இன்றைய திட்டத்தின்படி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உருவாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், இப்போது திட்டமிட்டுள்ளபடி இந்தக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுவதால், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்தத் திட்டத்தை அ.தி.மு.க. ரத்து செய்யும். இதற்குப் பதில், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இருந்து சென்னை அல்லது பெங்களூருக்கு சரக்குகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அ.தி.மு.க. கொண்டு வரும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு மாற்று துறைமுகமாக மேம்படுத்தப்படும்.

1 comment:

இருமேனிமுபாரக் said...

மொட்டை போட்டுக்கொண்டு காதை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
பெரிய நாமம் போட்டு பிளவர் வைப்பார்கள்.

Post a Comment