Pages

17 April 2009

காதலர்களே எனக்கு ஓட்டுப் போடுங்க… வித்தியாசமான வேட்பாளர்!

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்கட்டமாக 124 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்துக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றவோ இல்லையோ அப்போதைக்கு நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்.

வாக்குறுதிகளை வாரிவீசுவதில் சில பேர் ரொம்ப வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். அந்த வித்தியாசமானவர்கள்கூட யோசித்துப் பார்க்க முடியாத தனிவழியில் தனது பிரசாரத்தைத் துவங்கியிருக்கிறார் மதுக் நாத் செளத்திரி. பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான இவர் காதலர்களைக் கவரும் ரூட்டில் பயணிக்கிறார்.

”காதலர்களே, நீங்கள் சுதந்திரமாகக் காதலிக்க வேண்டுமா? தனிமையில் சந்தித்து பேச, உம்மா தர அடர்த்தியான பூங்காக்கள் வேண்டுமா? உங்களிடம் யாரும் வாலாட்டாமல் இருக்க பாதுகாவலர்கள் வேண்டுமா? அப்ப எனக்கு ஓட்டுப் போடுங்க! உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து தருகிறேன்” என்று கிளம்பிவிட்டார்.

காதலர்கள் எந்த வயதில் இருந்தாலும் அவர்களைச் சேர்த்து வைப்பேன் என்றும் இவர் உறுதிமொழி கூறுகிறார்.

55 வயது இந்தி பேராசிரியரான இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பாக, தன்னுடைய (மனைவி தவிர) மாணவியைக் காதலிக்கும் விஷயத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்.

காதலியுடன் தனியாக வசித்துவரும் இந்த பேராசிரியர் சென்ற வாரம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். மீடியா முன்னிலையில், தன் காதலியுடன் தோன்றி பேட்டி கொடுத்தார்.

அப்போது காதலர்களுக்கு ஆதரவாக பல சங்கதிகளைக் கூறி, அவையெல்லாம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிறைவேற்றப்படும் என்றார்.

”மற்ற வேட்பாளர்கள் போல என்னிடம் அரசியல் பின்புலமோ பண பலமோ இல்லை. ஆனால் காதலிக்கும் எல்லா உள்ளங்களிலும் எனக்கு இடமிருக்கிறது. அதனால், நிச்சயம் வெற்றி பெறுவேன்”என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

கூட்டுக்குடும்பத்தில் சிக்கிக்கொண்டு பேசக்கூட தனிமை கிடைக்காத தம்பதிகளையும் இவர் கவர்கிறார்.

காதலர்களுக்கு ஆதரவாக இருக்கிறாரே என்று பார்த்தால் குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப ஸ்டிரிக்ட்டாக இருக்கிறார் இந்த பேராசிரியர். இவருக்கு ஒரே மகன் என்பதாலோ என்னவோ, ”குடும்பத்துக்கு ஒரு வாரிசு போதும். நாடு அப்பதான் உருப்படும்” என்கிறவர்,

”அந்தக் குழந்தைக்கு ஆகும் கல்விச் செலவை அரசே ஏற்கவேண்டும். அதே சமயம் வறுமைக்கோட்டுக்குள் வராத, ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளுபவர்களுக்கு தனி வரி போட வேண்டும்” என்று அதிர்ச்சி வைத்தியமும் தருகிறார்.

காதலை ஆதரிப்பவர் குழந்தைகளை ஆதரிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை பிறக்கும் குழந்தைகள் எல்லாம் காதலிக்க ஆரம்பித்தால் பூங்காக்கள் உருவாக்கி கட்டுப்பாடியாகாது என்று நினைக்கிறாரோ.

No comments:

Post a Comment