Pages

25 March 2009

கழுகுகளிடமிருந்து முயல் குட்டிகளைக் காப்பதுபோல் வன்னி மக்களின் நிலை

வன்னியில் யுத்தத்தால் சிக்குண்டுள்ள மக்கள், எவ்வாறு இலங்கை இராணுவத்தின் எறிகணைகளில் இருந்து தப்புவது என்று தெரியாதிருப்பதாக தமிழ் புனர்வாழ்வு கழகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் லோரன்ஸ் கிரிஸ்டி தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி அவர் எழுதியுள்ள அறிக்கையிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முதல் எறிகணை வீழ்ந்து வெடித்த பின்னர் இரண்டாவது எறிகணை வீழும் போது முயல்கள் தமது குட்டிகளை கழுகுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சுமந்து செல்வதை போல சுமந்துகொண்டு பதுங்கு குழிகளுக்குள் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதுங்குகுழிகள் யாவும் மிகவும் பலம் வாய்ந்தவையாக அமைக்கப்படவில்லை. அவை மணல் மூடைகளாலும் பனை மரங்களாலும் சுமார் 10 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மரக்குற்றி ஒன்றுக்கு 300 ரூபா செலவிடவேண்டியுள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு பதுங்குகுழிக்கு 15 மரங்கள் தேவைப்படுகிறது. போக்குவரத்துக்காக 4500 ரூபா செலவிடப்படுகிறது பதுங்குக்குழிளை அமைப்பதற்காக இரண்டாயிரம் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. வன்னியில் தங்கியுள்ள மக்களுக்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கழிப்பறைகளை அமைத்து வருகிறது. சின்னம்மை, வயிற்றோட்டம், காய்ச்சல், இருமல் மற்றும் கண்நோய் ஆகியவை வன்னியில் பரவியுள்ளன.

இரவில் ஒவ்வொரு கூடாரங்களிலும் இருமல் சத்தங்களை கேட்கக்கூடியதாக உள்ளது. பலர் பல தடவைகளாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிருஸ்டி தெரிவித்துள்ளார்.

மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பாரிய கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.

மீன் ஒரு கிலோ 1000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மிளகாய் கிலோ ஒன்று 4000 ஆயிரம் ரூபாவுக்கும், அரிசி 200 ரூபாவுக்கும், முட்டை ஒன்று 50 ரூபாவுக்கும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 300 ரூபாவுக்கும், தேங்காய் 110 ரூபாவுக்கும் கிடைக்கிறது.

இந்தநிலையில், இடம்பெயர்ந்த மக்கள், தமது வாழ்க்கையை கொண்டு செல்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் தமது கலாசார விழுமியங்களையும் பழக்க வழக்கங்களையும் கைக்கொள்வதில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்வதாக கிருஸ்டி குறிப்பிட்டுள்ளார்.

Thanks Nerudal.com

No comments:

Post a Comment