Pages

26 March 2009

பா.ஜ.க.,வை மதவாத கட்சி என்று கூறுவது சுயநலம்: சரத்குமார்

மதுரையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய சரத்குமார், தமிழகத்தில் பா.ஜ.க.,வுடன் தேர்தல் உடன்பாடு குறித்து 2 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்குப்பின், எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.,வை மதவாத கட்சி என்று மற்ற கட்சிகள் கூறுவது அவர்களின் சுயநலத்திற்காகத்தான் என்று தெரிவித்த அவர், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க.,வுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்ததை சுட்டிக்காட்டினார்.

கோயிலுக்கு செல்வதை வன்மையாக கண்டித்து வளர்ச்சியடைந்த தி.மு.க.,வில் இன்று ஏராளமானோர் கோயிலுக்கு செல்வதை சுட்டிக்காட்டியுள்ள சரத்குமார், மக்களின் தேவைகளுக்கேற்ப கட்சிகள் மாறிவருவதாக தெரிவித்தார். எனவே மதவாதம் என்ற பேச்சு தேர்தலில் எடுபடாது என்று அவர் கூறினார்.

பா.ஜ.க.,வுடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறிய அவர், தேர்தல் அறிக்கை கல்வி, கிராமப்புற மேம்பாடு, விவசாயம், இளைஞர் வேலைவாய்ப்பு உள்ளிட்ட முற்போக்கு சிந்தனை கொண்டதாக அமையும் என தெரிவித்தார். தானும், ராதிகாவும் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறோம் என்பதை இன்னும் முடிவு செய்ய வில்லை என தெரிவித்த அவர், பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்னைக்கு ஒரு சுமூக முடிவு காணப்படும் என உறுதியளித்தார்.

No comments:

Post a Comment