19 March 2009

வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் -- தமிழ் நாடு காங்ரஷ் தலைவர் தங்கபாலு


''வருத்தப்படாத தலைவர்கள் சங்கம் என்று ஆரம்பித்தால், அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு முதல் இடம் தரலாம்! எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்கிற 'வின்னர்' கைப்புள்ள வடிவேலு மாதிரி, எவ்வளவு ஒதுக்கினாலும் தாங்கிக் கொள்கிற சிரிப்பு தலைவர் ரேஞ்சுக்கு அவரை ஆக்கிவிட்டார்கள், பாவம்!''

- இப்படிச் சொல்வது காங்கிரஸின் எதிரிகள் அல்ல... நம்மூர் காங்கிரஸ்காரர்களேதான்!

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கள் சிலரிடம் பேசினோம். ''காங்கிரஸ் மேலிடமும் கூட்டணிக் கட்சியான தி.மு.க-வும் சேர்ந்து எடுக்கும் பல முடிவுகள் தங்கபாலுவுக்கு கடைசி நேரம் வரை தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், சம்பந்தமில்லாத ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டு... தரையில் கால் பதியாமல் ஏதேதோ பேசி வருகிறார்!'' என்று சொல்லும் இவர்கள், முதல் உதாரணமாகத் தருவது திருமாவளவன் சமாசாரம்.

''இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸாரை தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் திருமாவளவனை, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யச் சொல்லி, தங்கபாலுதான் முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்தி வந்தார். கூடவே, அவரை தி.மு.க-காங்கிரஸ்

கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்றும் சொல்லி வந்தார். ஆனால், தி.மு.க. தலைவர் காங்கிரஸ் மேலிடத்தில் யாரிடம் பேசி என்ன சிக்னல் வாங்கினாரோ தெரியவில்லை... திடீரென்று, 'விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் தி.மு.க-வும் பல்வேறு விஷயங்களில் ஒத்த கருத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதேபோல காங்கிரஸ் இயக்கத் தோடு கருத்து ரீதியில் அந்த இயக்கத்துக்கு முரண்பாடுகள் எதுவுமில்லை!' என்று கூறியிருக்கிறார். காங் கிரஸ் சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் உள்ள தங்கபாலுவோ... பத்திரிகையாளர்களை சந்தித்து, 'தொல். திருமாவளவன் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பார் என்று முதல்வர் சொன்னது குறித்து எனக்குத் தெரியாது...' என்று 'மண் ஒட்டாமல்' சொல்லியிருக்கிறார்!'' என்கிறார்கள்.

பா.ம.க. விஷயமும் இப்படித்தான்... கோட்டையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது முதல்வர், 'பா.ம.க-விலிருந்து இதுவரை என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை' என்றார். அதேதினம் தங்கபாலுவோ, 'நாங்கள் பா.ம.க-வுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்' என்றார். இதைக் கேட்டு தி.மு.க-வினர், 'பாவம்... அவர் ஆசைக்கு ஏதோ, யாருடனோ பேச்சுவார்த்தை நடத்துகிறார் போலிருக்கு. டெல்லியிலிருந்து எங்களுக்கு சிக்னல் வந்த பிறகுதான் அதிகாரபூர்வமாக காய் நகர்த்தல் இருக்கும்' என்று சிரிக்கிறார்கள்.

ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அடுத்தடுத்து சோனியா காந்தியிடம் போட்ட 'பிட்'டுகளைத் தொடர்ந்துதான் தங்கபாலுவை இப்படி தகவல் தொடர்பில்லாமல் விட்டு, தனி டிராக்கில் காங்கிரஸ் தலைமை முடிவுகளை எடுப்பதாகவும் காங்கிரஸில் பேச்சு இருக்கிறது. மும்மூர்த்திகள் சோனியாவிடம் தந்த புகார்களின் பட்டியல் மிக நீண்டதாம்!

''மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவுடன், நிர்வாகி கள் யாரையும் கலந்துபேசாமல் தமிழக காங்கிரசுக்கு 33 பேர் கொண்ட செயற்குழுவை அமைத்தார் தங்கபாலு. அதில் 15 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள். இந்த சிறப்பு அழைப்பாளர்களில் இதுவரை காங்கிரஸ்காரராகவே இல்லாத, தங்கபாலுவின் மனைவி ஜெயந்தியும் ஒருவர். ஜெயந்தி தவிர, அந்த குழுவில் ஜெயா அருணாசலம், தேன்மொழி காந்திநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள். இவர்களெல்லாம் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அது மட்டுமல்ல, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக ஜி.பூவராகவனை நியமித்திருக்கிறார். அவர் சரத்பவார் கட்சிக்குப் போய், திண்டிவனம் ராமமூர்த்தியோடு கட்சிக்கு எதிராக சமீப காலம் வரையில் செயல்பட்டு வந்தவர். கட்சியின் 'ஒழுங்கு நடவடிக்கை'க்கு உள்ளாக வேண்டியவரை, அந்தக் குழுவுக்குத் தலைவராக நியமித்திருக்கிறார் தங்கபாலு. இந்தக் குழுவில் நியமிக்கப் பட்டுள்ள ராபர்ட் புரூஸ், ஏற்காட்டுக்குப் பக்கத்தில் வாழந்தி என்ற ஏரியாவில் உள்ள தங்கபாலுவின் எஸ்டேட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்!'' என்று சொல்லுபவர்கள்...

''இதெல்லாமே தெரியவந்ததும் சோனியா காந்தி நேரடியாகவே தங்கபாலுவுக்கு டோஸ் விட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக அவர் போட்ட ஐவர் கமிட்டியில் பேருக்கு தங்கபாலு இருந்தாலும் இளங்கோவன், ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், சுதர்சனம் ஆகியோரிடம்தான் தி.மு.க. தலைமை எதையும் பேசுகிறது!'' என்று கூறுகிறார்கள்.

கூட்டணிக்குள் விஜயகாந்த்தை கொண்டு வரும் முயற்சியை கையிலெடுத்திருப்பவர் ஜி.கே.வாசனாம்! ஜி.கே.வாசன் மட்டும் தயாநிதி மாறனைச் சந்தித்துப் பேசுகிறார். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து எங்கோ வெளியில் போய்விட்டுத் திரும்பினார்கள். விஜயகாந்த் முன்வைக்கும் ஸீட் தொடர்பான கோரிக்கைகளை ஜி.கே.வாசனும், தேர்தல் செலவு தொடர்பான கோரிக்கைகளை தயாநிதி மாறனும் எதிர்கொள்வது என்று பொறுப்பு பிரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறதாம்.

இதுபற்றி காங்கிரசுக்குள், ''பாவம், இதெல்லாம் தங்கபாலுவுக்கு எந்தளவுக்குத் தெரியுமோ..?'' என்கிறார்கள் கமுக்கமாகச் சிரித்தபடி.

''தேர்தல் செயல்பாடுகளில் தங்கபாலு திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறாரா?'' என்று தி.மு.க. முகாமில் விசாரித்தால்... ஆமோதிப்பாகவே பதில் வருகிறது.

''காங்கிரஸ் தரப்பை எப்படியாவது அ.தி.மு.க. பக்கம் அழைத்துப் போய்விட வேண்டும் என்று நடந்த சில முயற்சிகளை நாங்கள் மட்டுமல்ல... டெல்லி காங்கிரஸ் தலைமையே விரும்பவில்லை. அந்த முயற்சி பலிக்காத விரக்தியில் தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக உள்ளடி வேலைகளைச் சிலர் செய்யக்கூடும் என்ற முன்ஜாக்கிரதையோடு செயல்படுகிறோம்!'' என்கிறார்கள் சுருக்கமாக!

இதுகுறித்தெல்லாம் கே.வி.தங்கபாலுவிடமே கேட்டோம். ''கட்சிக்குள் சில புல்லுருவிகள் வேண்டாத புரளிகளைக் கிளப்புகிறார்கள். என் மனைவி ஜெயந்தி, மெகா தொலைக்காட்சி மூலம் காங்கிரஸ் கட்சியின் பிரசார பீரங்கியாக செயல்பட்டு வருகிறார். தேன்மொழி காந்திநாதன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மகளிர் அணியின் தலைவராக இருந்தவர். ஜெயா அருணாசலம் ராஜீவ் ட்ரஸ்டின் மகிளா பிரிவு தலைவராக இருந்தவர். சுமார் பத்து லட்சம் மகளிர் குழுக்களின் தலைவியாகவும் இருப்பவர். இவர்களின் பின்னணியும் பெரும் பங்கும் சக்தி வாய்ந்தது. தகுதி அடிப்படையில்தான் அவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. ராபர்ட் புரூஸ், சென்னையின் சீனியர் வழக்கறிஞர். தமிழக மைனாரிட்டி காங்கிரஸ் பிரிவின் துணைத் தலைவர். கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இதே போலத்தான் பூவராகவனும்.

கூட்டணி விஷயத்தில் எங்கள் தலைமை சொல் வதைத்தான் நாங்கள் செய்வோம். திருமாவளவன் விஷயத் தில் மீடியாக்கள் என்னிடம் கேள்வி எழுப்பியபோது, 'மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும்' என்று சொன்னால் அதில் என்ன பிரச்னை? தலை மையிடம் ஆலோசிக்காமல் வெறும் பரபரப்புக்காகவும் மீடியாக் களுக்குத் தீனி போடவேண்டும் என்பதற்காகவும் வாய்க்கு வந்த படியெல்லாம் என்னால் பேசிவிட முடியாது. மற்றபடி, டெல்லி தலைமையுடன் சீரான தகவல் தொடர்பில்தான் இருக்கிறேன். என்னுடைய உண்மையையும் உழைப்பையும் அன்னை சோனியா அறிவார்!'' என்றார் நறுக்கென்று!

Source
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2752:2009-03-18-16-47-59&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54
Thanks tamilskynews

1 comment:

ttpian said...

பேசாமல் தன்கபாலு "தோட்டத்தில்" பஜனை செய்ய போகலாம்

Post a Comment