Pages

09 October 2009

லெனினை விடுவிக்க வேண்டும் : பத்திரிகையாளர்கள் ஆவேசம்


தினமலர்' செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூத்த பத்திரிகையாளர்கள், சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். "தினமலர்' செய்தி ஆசிரியர் லெனின் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நேற்று நடந்தது.


கூட்டத்தில் பேசியவர்கள் விவரம்:


இராமலிங்கம் (தினமலர்): கடந்த 7ம் தேதி மாலை 6.30 மணிக்கு "தினமலர்' அலுவலகத்திற்குள் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி போலீசார் வந்து, செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர். அப்போது போலீசார் சாதாரண உடையில் இருந்தனர். ஆசிரியரிடம் தகவல் சொல்லிவிட்டு கமிஷனர் அலுவலகத்திற்கு வருகிறோம் என்று சொன்ன போது கூட, அவர்கள் அனுமதிக்கவில்லை. வழக்கு பதிவாகியிருக்கிறது என்ற தகவலும் இல்லை, தமிழகத்தில் முதல் தடவையாக செய்தி ஆசிரியரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, கைது செய்த சம்பவம் நடந்திருக்கிறது. இது ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் கறுப்பு நாளாகும். அதுவும் செய்தி குறித்து, "உள்நோக்கம்' இல்லை என்று வருத்தம் தெரிவித்த பின் இந்த நடவடிக்கை. அலுவலகத்தில் செய்தி ஆசிரியரை கைது செய்தது தவறு. இது தமிழகத்தில் நடந்த மோசமான முன்னுதாரணம். அடுத்ததாக எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் இந்த நிலை தமிழகத்தில் வரலாம்.


தேவநாதன் (விண் "டிவி' உரிமையாளர்): நடிகர் சங்கத்தின் கண்டனக் கூட்டத்தில் நடிகர் ரஜினி பேசுகையில், "விபசார வழக்கில் கைது செய்யப்படும் பெண்களின் போட்டோ போடக் கூடாது. யாரும் பணத்திற்காக விபசாரம் செய்ய மாட்டார்கள். இரண்டு வேளை சோற்றுக்காகத் தான் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்' என்றார். விபசாரம், கள்ளச்சாராயம், ரவுடித் தனம் செய்பவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தான் செய்கின்றனர். அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? வேண்டுமானால் இனி விபசாரத்தை தொழில் என்று அங்கீகரித்து சட்டம் இயற்றினால், மீடியாக்கள் அது குறித்த செய்தி வெளியிட நேரிடாது.


கோபால் (ஆசிரியர், நக்கீரன்): பத்திரிகையாளர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நடிகர், நடிகைகளால் சீரழிந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. விபசாரம் செய்யும் நடிகைகளின் பட்டியலை கொடுக்கத் தயாராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க சங்கம் தயாராக இருக்கிறதா? நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்காததால் நடிகை புவனேஸ்வரியை கைது வேண்டி இருந்தது என போலீசார் தெரிவித்தனர். பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து அத்துமீறிய போலீசாரை வன்மையாக கண்டிக்கிறேன். அவதூறாக நடிகர் சங்கத்தின் முன் பேனர் வைத்தவர்கள் மீதும் தனித்தனியாக வழக்கு தொடுக்க வேண்டும்.கைது செய்யப்பட்ட "தினமலர்' செய்தி ஆசிரியர் லெனினை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பத்திரிகை ஆசிரியரை கைது செய்வதற்கு அரசு இவ்வளவு முனைப்புடன் செயல்படுவதற்கு என்ன காரணம்? தமிழ் கலாசாரத்தை சீரழிப்பது நடிகைகளும், சினிமாவும் தான். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஸ்காட்(யு.என்.ஐ., தலைமைச் செய்தியாளர்): அவதூறு செய்தி வெளியிட்டிருந்தால் கோர்ட் மூலம் தான் சந்திக்க வேண்டும். பெண் கொடுமை என்ற பிரிவின் கீழ் லெனினை கைது செய்தது தவறு. இந்த நடவடிக்கை முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். சூப்பர் ஸ்டாருக்காக, செய்தி ஆசிரியரை கைது செய்யச் சொன்ன தமிழக அரசு, கமிஷனர் அலுவலகத்தில், "தினமலரை அடித்து நொறுக்கி விடுவேன்' என்று கூறிய விஜயகுமாரை அப்போதே கைது செய்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சினிமாகாரர்களை உங்கள் பக்கம் வைத்திருக்காதீர்கள், அது சரிப்படாது.


பார்க்கர் (இந்திய தவுஹீத் அமைப்பு தலைவர்): பத்திரிகை இருப்பதால் தான் ஜனநாயகம் இருந்து வருகிறது. அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக, பெண்கள் வன்கொடுமை என்ற சட்டப்பிரிவின் கீழ் செய்தி ஆசிரியரை கைது செய்த தமிழக அரசு, ஜெயலலிதாவை "திருமதி' என்று அழைத்த முதல்வர் மீது தான் வழக்கு போட வேண்டும். சினிமா சம்பந்தமான அனைத்து செய்திகளையும் புறக்கணிக்க வேண்டும்.


ரவீந்தரதாஸ் (தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்): பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகைகளை வன்மையாக கண்டிக்கிறோம். அநாகரிகமாக பேசிய விஜயகுமார், ஸ்ரீபிரியா, விவேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பாலு (தீக்கதிர்): சட்டக் கல்லூரி விவகாரத்தில், கல்லூரி தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்படவில்லை என்று வேடிக்கை பார்த்த போலீஸ், உள்நோக்கத்தோடு பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து செய்தி ஆசிரியரை கைது செய்துள்ளனர். வழக்கு போட்ட போலீசாரும், தமிழக அரசும் தெரிந்தே தவறு செய்துள்ளனர்.இவ்வாறு பேசினர்.


லெனினை விடுவியுங்கள் : ஐ.என்.எஸ்., கோரிக்கை: "தினமலர்' நாளிதழின் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து இந்திய பத்திரிகையாளர் சங்கம் (ஐ.என்.எஸ்.,) தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரபல தமிழ் நாளிதழான, "தினமலர்' பத்திரிகையின் செய்தி ஆசிரியர் பி.லெனின் கைது செய்யப்பட்டதற்கு, இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. போலீசார் எடுத்த இந்த நடவடிக்கை, பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலாகும்.வெளியிடப்பட்ட செய்திக்கு, "தினமலர்' வருத்தம் தெரிவித்த பிறகும், போலீசார் மேற் கொண்ட நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அதுவும், சீருடையில் இல்லாமல் மப்டியில் அலுவலகம் சென்று, செய்தி ஆசிரியரை பலவந்தமாக கைது செய்தது, இதுவரை கேட்டறியாதது. லெனின் மீதான வழக்கை வாபஸ் பெறும்படி தமிழக முதல்வரை, இந்திய பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. அது மூலம் கருத்து சுதந்திரத்திற்கு உரமூட்டிய செயலாக அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியன் ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் அமைப்பின் தலைவர் சுரேஷ் அக்கவுரி வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர் மீதான வழக்கு வாபஸ் பெறப் பட வேண்டும் என்று கூறியுள்ளார்.


எடிட்டர்ஸ் கில்டு: சென்னையில், "தினமலர்' நாளிதழின் செய்தி ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, "இந்திய எடிட்டர்ஸ் கில்டு' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, "இந்திய எடிட்டர்ஸ் கில்டு' வெளியிட்டுள்ள செய்தி: "தினமலர்' நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனினை, நேற்று முன்தினம், சீருடை இல்லாமல் சாதாரண உடையணிந்த போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.ஜனநாயகமற்ற முறையிலான சில நெருக்கடி காரணமாக, தமிழக அரசு மற்றும் போலீசார், பத்திரிகை சார்பில் விளக்கமளிக்க, எவ்வித வாய்ப்பும் அளிக்காமல், இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே, லெனினை உடனே விடுதலை செய்வதோடு, "தினமலர்' பத்திரிகை பணியில் இடையூறு விளைவித்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் எதிர்ப்பு


கோவை பிரஸ் கிளப்: கோவை பிரஸ் கிளப் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, பிரஸ் கிளப் தலைவர் வி.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தார். திரைப்பட உலகத்தினர் குறித்த செய்தி தொடர்பாக சென்னை, "தினமலர்' செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தது ஏற்புடையதல்ல. இந்த கைது நடவடிக்கையை, கோவை பிரஸ் கிளப் கண்டிக்கிறது.


சேலம் பிரஸ் கிளப்: "தினமலர்' செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டதற்கு, சேலம் பிரஸ் கிளப் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. "உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்' என, பிரஸ் கிளப் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


நீலகிரி பிரஸ் கிளப்: பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்த, "தினமலர்' செய்தி ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்ய, தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.


தமிழ் மக்கள் பண்பாட்டுக்கழகம், காஞ்சிபுரம்: "தினமலர்' செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.


பிரஸ் கிளப் ஆப் மதுரை தலைவர் ராமசாமி, செயலர் சரவணமுத்து, பொருளாளர் சுந்தர் வெளியிட்ட அறிக்கை: கைது சம்பவத்திற்கு பிரஸ் கிளப் ஆப் மதுரை உணர்வுபூர்வமான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. "தினமலர்' வருத்தம் தெரிவித்த பிறகும் இந்த கைது நடவடிக்கை மிகுந்த வருத்தம் அளிக்கிறது.


மதுரை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.,) தலைவர் சின்மயா சோமசுந்தரம்: பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் அவரை கைது செய்தது தவறு. அதற்குள் இந்த அவசர கைது உள்நோக்கம் கொண்டது.


நாகர்கோவில்: நாகர்கோவில் பிரஸ் கிளப்பின் அவசர கூட்டம், தலைவர் டி.ரெங்கநாதன் தலைமையில் நடந்தது. செயலர் மணிகண்டன் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், போலீசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


கூட்டத்துக்கு பின்னர் டி.ரெங்கநாதன், மணிகண்டன் ஆகியோர் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை. அதில் வரும் செய்தி தவறாக இருக்கும் பட்சத்தில், அதற்கு தீர்வு காண கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி இருக்க, தினமலர் செய்தி ஆசிரியரை அலுவலகத்தில் புகுந்து கைது செய்தது தவறான முன்னுதாரணமாக அமைந்து விட்டது. மேலும், பத்திரிகை வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக அமைந்து விட்டது. ஒரு பத்திரிகையாளரான முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது துரதிஷ்டவசமானது. இதற்கு சுமூக தீர்வு காண முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,


தேனி: தேனி பிரஸ் கிளப் அவசரக்கூட்டம் செயலர் மூர்த்தி தலைமையில் நடந்தது. செய்தியாளர் முத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில், "தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்' என, அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திண்டுக்கல்: திண்டுக்கல் பிரஸ் கிளப் அவசர கூட்டம் செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. பொருளாளர் சுரேஷ் மற்றும் செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகர்கள் வரம்பு மீறி பேசியதை கண்டித்தும், போலீசாரின் அராஜக நடவடிக்கையை கண்டித்தும், உறுப்பினர்கள் ஆவேசத்துடன் பேசினர்.


ராமநாதபுரம்: ராமநாதபுரம் பிரஸ் கிளப் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரஸ் கிளப் தலைவர் ராஜா தலைமை வகித்தார். மூத்த பத்திரிகையாளர் அப்துல்லா முன்னிலை வகித்தார். பத்திரிகையாளர்களை அவதூறாக பேசி, ஜனநாயகத்தின் நான்காவது தூணை இழிவுபடுத்திய நடிகர், நடிகைகளை கைது செய்யவும், இந்த அராஜக போக்கிற்கு அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment