Pages

06 August 2009

வருத்தம் தெரிவிப்பதாக, நடிகர் விஜய் ஐகோர்ட்டில் பதில்

`சிவகாசி' படத்தில் உள்ள காட்சிகள் `வக்கீல்களின் உணர்வுகளை பாதிப்பதாக கருதினால் வருத்தம் தெரிவிக்கிறேன்' என்று சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் மனுதாக்கல் செய்துள்ளார்.

படஅதிபர் ஏ.எம்.ரத்தினம் தயாரித்த படம் `சிவகாசி'. பேரரசு இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய், காமெடி நடிகர் பாஸ்கர், நடிகை அசின் முதலானோர் நடித்துள்ளனர். 2005-ம் ஆண்டில் இந்த படம் வெளிவந்தது. `சிவகாசி' படமானது வக்கீல்களின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இருப்பதாக தமிழ்நாட்டில் உள்ள 13 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் அவதூறு வழக்கை வக்கீல்கள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்று நடிகர் விஜய், படஅதிபர் ரத்தினம், இயக்குனர் பேரரசு, காமெடி நடிகர் பாஸ்கர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். வக்கீல்கள் சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகியோர் வருத்தம் தெரிவித்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என்று வக்கீல் பிரபாகரனை பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதைக் கேட்ட பிரபாகரன், 3 பேரும் எழுத்து பூர்வமாக மன்னிப்பு கேட்டு மனுதாக்கல் செய்தால் அதை கோர்ட்டு பரிசீலித்து, எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். அதே சமயம் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு கோர்ட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று பிரபாகரன் பதில் அளித்தார்.


இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நடிகர் விஜய், படஅதிபர் ஏ.எம்.ரத்தினம், இயக்குனர் பேரரசு, காமெடி நடிகர் ஆகியோர் வருத்தம் தெரிவித்து மனுக்களை தாக்கல் செய்தனர். நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகாசி படத்தில் வக்கீல்களை அவதூறு செய்ததாக 13 வழக்குகள் பல்வேறு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில், பல்வேறு வக்கீல்களினால் என்மீதும், படஅதிபர், டைரக்டர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. வக்கீல்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நான் உடனடியாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

பொதுவாக வக்கீல் தொழில் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. `தமிழன்' என்ற படத்தில் வக்கீல்களின் புகழை உயர்த்தும் வகையில் நான் வக்கீலாக நடித்துள்ளேன். இதிலிருந்து வக்கீல்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்பது தெரியும். வக்கீல்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. வழக்கு தொடர்ந்தவர்களுக்கும், எனக்கும் எந்த விரோதமும் கிடையாது. இவர்களை எனக்கு தெரியாது. சிவகாசி படத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வக்கீல்களின் உணர்வுகளை துன்புறுத்துவதாக கருதினால் நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


வக்கீல் பிரபாகரனை பார்த்து இதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று நீதிபதி கேட்டார். வக்கீல் தொழில் மீது அளவுக்கடந்த மரியாதை வைத்திருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர் என்று நீதிபதி தெரிவித்தார். இதற்கு பிரபாகரன் பதில் அளிக்கையில், வருத்தம் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார். ஆனால், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.

மத்திய சினிமா தணிக்கை குழுவில் வக்கீல்கள் அங்கம் வகிக்கிறார்களா என்று நீதிபதி கேட்டதற்கு, பிரபாகரன் இல்லை என்று பதில் அளித்தார். தணிக்கை குழுவில் வக்கீல்களை நியமித்தால் உன்னதமான தொழில்களை பாதிக்காமல் படம் எடுக்க உதவுவார்கள் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

இதன்பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment