Pages

02 July 2009

டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிப்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4 உயர்வு

பெட்ரோல் விலை, லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த விலை உயர்வு, உடனடியாக அமலுக்கு வந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படும் என்று, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி, பெட்ரோலிய பொருட்களின் விலை நேற்று உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் விலை, லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. அதே நேரத்தில், சமையல் கியாஸ் மற்றும் ரேஷனில் வழங்கப்படும் மண்எண்ணை ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மத்திய பெட்ரோலிய துறை மந்திரி முரளி தியோரா பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று சந்தித்து பேசியபின், இந்த விலை உயர்வு முடிவு அறிவிக்கப்பட்டது. விலை உயர்வு விவரத்தை மந்திரி முரளி தியோரா நேற்று நிருபர்களிடம் வெளியிட்டார். மண்எண்ணை மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படாததால் ஏற்படும் இழப்பை சரிக்கட்டுவதற்கான அறிவிப்பு, வருகிற 6-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விலை உயர்வு குறித்து, பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பேரலுக்கு 40 டாலராக (ஒரு டாலரின் மதிப்பு ஏறத்தாழ ரூ.48) இருந்த கச்சா எண்ணை விலை, இன்று 70 டாலராக அதிகரித்து உள்ளது. கச்சா எண்ணை விலை 40 டாலராக குறைந்தபோது, இரண்டு கட்டங்களாக பெட்ரோல், லிட்டருக்கு ரூ.10 வரையும், டீசல், லிட்டருக்கு ரூ.4 வரையும் குறைக்கப்பட்டது.

கச்சா எண்ணை விலை தற்போது 75 சதவீத அளவுக்கு உயர்ந்து இருப்பதால், எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட, பெட்ரோலிய பொருட்களின் விலையை மாற்றியமைப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக, ரேஷனில் வினியோகம் செய்யப்படும் மண்எண்ணை மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலைகள் உயர்த்தப்படவில்லை.

இந்த வகையில் மட்டும், நுகர்வோர்களுக்காக வழங்கப்படும் மானியத்தின் காரணமாக, அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும். மண்எண்ணைக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.15.26-ம், சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.92.96-ம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஓரளவுக்கு உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. பெட்ரோலை பொறுத்தவரை, தற்போதைய கச்சா எண்ணை விலை உயர்வால் லிட்டருக்கு 6 ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட போதிலும், லிட்டருக்கு 4 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது.

அதேபோல், டீசலுக்கு ரூ.3.62 நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையில் 2 ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டு உள்ளது. 1-ந் தேதி (நேற்று) நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment