Pages

04 June 2009

தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை சஸ்பெண்டு செய்யக்கோரி வழக்கு

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை ஓட்டுப்போட அனுமதிக்காததால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா புல்லம்பாடி பஞ்சாயத்து கவுன்சிலராக இருப்பவர் பார்த்திபன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி பாஸ் புத்தகம் போன்ற 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அதை காண்பித்து ஓட்டு போடலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்து இருந்தார்.

வாக்களிப்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் பட்சத்தில் அவர்களை வாக்களிக்க அனுமதித்து இருக்க வேண்டும். கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் ரேஷன் கார்டு தவிர வேறு ஆவணங்களை வைத்திருக்க வாய்ப்பு இல்லை.

ரேஷன் கார்டு இருந்தால் தான் ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் வாங்க முடியும். வங்கி கணக்குகளை தொடங்க முடியும். அப்படிப்பட்ட முக்கிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்டை காண்பித்து ஓட்டு போட முடியாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததால் கிராமப்புறத்தை சேர்ந்த பலர் ஓட்டுப்போட முடியவில்லை. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை ஓட்டு போட அனுமதித்து இருந்தால் தற்போது பதிவான ஓட்டுகளை விட அதிகமான ஓட்டுகள் பதிவாகி இருக்கும். அவ்வாறு ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும் போது வெற்றி, தோல்வியும் மாறுபடலாம்.

மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் ரேஷன் கார்டு வைத்திருந்தவர்களை ஓட்டுப்போட தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தேர்தல் அதிகாரி பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார்.

எனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும். கம்பம், தொண்டாமுத்தூர், இளையான்குடி, பர்கூர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை ஓட்டுப்போட அனுமதிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பெரியகருப்பையா, அக்பர் அலி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய தேர்தல் ஆணையம், மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஆகியோர் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment