Pages

10 June 2009

12 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் நடு வானில் மாயம் !!!

12 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் நடு வானில் மாயமாகி விட்டது. அந்த விமானம் மலையில் மோதி நொறுங்கியதாக கருதப்படுகிறது.

இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம், போர் வீரர்கள் மற்றும் பொருட்களை எடுத்துச்செல்லப் பயன்படுத்தப்படும் வகையை சேர்ந்தது. இந்த ரக விமானம் ஒன்று, நேற்று அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டம் மோகன்பாரி என்ற விமான தளத்தில் இருந்து புறப்பட்டது. அதில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானிகள் மொத்தம் 6 பேர் இருந்தனர்.

அந்த விமானம், அருணாசல பிரதேச மாநிலம் மெச்சுகா என்ற இடத்தில் வந்து இறங்கியது. பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு பொதுமக்கள் 6 பேரை ஏற்றிக்கொண்டு, ஜோர்காட் என்ற இடத்தை நோக்கி புறப்பட்டது.

அதன் பின் அந்த விமானத்தை பற்றிய எந்த தகவலும் இல்லை. ஜோர்காட் செல்லும் வழியில் அந்த விமானம் மலையில் மோதி நொறுங்கி கீழே விழுந்து இருக்கலாம் என்று விமானப்படையின் செய்தி தொடர்பாளர் பி.சாகு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்த விமானம், அருணாசல பிரதேசம்-நேபாள மலைப்பகுதியில், அடர்ந்த காடுகளில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்று காலை மீட்பு பணியில் விமானங்களும், எல்லை பாதுகாப்பு படையினரும் ஈடுபடுகிறார்கள். விமானம் விழுந்ததாக கருதப்படும் இடம் மோசமான வானிலை கொண்ட இடமாகும். மீட்பு பணி மிக கடினமானது'' என்றும் கூறினார்.

நேற்று மாலை மற்றொரு விமானம், மீட்பு பணிக்காக சென்றது. என்றாலும், அடர்ந்த காட்டுப்பகுதியில் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. காலநிலையும் மோசமாக இருந்ததால், அந்த விமானம் திரும்பி விட்டது.

No comments:

Post a Comment