Pages

22 May 2009

காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிக்க முடிவு - தி.மு.க


மத்திய மந்திரி சபையில் தி.மு.க.வுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மந்திரி பதவி ஏற்க தி.மு.க. மறுத்து விட்டது. என்றாலும் காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிக்க முடிவு செய்து உள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான புதிய அரசு ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6-30 மணிக்கு பதவி ஏற்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை மந்திரி பதவி ஒதுக்குவது? என்னென்ன இலாகாக்களை தருவது? என்பது குறித்து அந்த கட்சிகளின் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி தலைமையிலான உயர்மட்ட காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த குழுவினர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நேற்றும் பேச்சுவார்த்தை நடந்தது.

கடந்த முறை காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க.வுக்கு 2 கேபினட் மந்திரி பதவியும், 5 ராஜாங்க மந்திரி பதவியும் ஒதுக்கப்பட்டது.

இந்த முறை தி.மு.க. எத்தனை மந்திரி பதவி கேட்டது? காங்கிரஸ் எத்தனை மந்திரி பதவி கொடுக்க முன்வந்தது என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும் தி.மு.க. சார்பில் 3 கேபினட் மந்திரி பதவியும், தனிப்பொறுப்புடன் கூடிய ஒரு ராஜாங்க மந்திரி பதவியும், 4 ராஜாங்க மந்திரி பதவியும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் 2 கேபினட் மந்திரி பதவியும், தனிப் பொறுப்புடன் கூடிய ஒரு ராஜாங்க மந்திரி பதவியும், 3 ராஜாங்க மந்திரி பதவியும் தருவதாக கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்படவில்லை.

எத்தனை மந்திரி பதவி என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும், தி.மு.க.வுக்கு மந்திரி பதவி ஒதுக்குவது தொடர்பான காங்கிரசின் திட்டம் திருப்தி அளிக்காததாலும், மந்திரிசபையில் சேர தி.மு.க. மறுத்துவிட்டது. என்றாலும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்று அக்கட்சி முடிவு செய்து உள்ளது.

இந்த தகவலை, தி.மு.க. பாராளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று இரவு நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. எனவே, பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment