Pages

25 May 2009

அமைச்சரவையில் பங்கேற்கிறது திமுக


அமைச்சரவையில் திமுக கோரிய அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படாததால் பிரச்னை நிலவி வந்தது. இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த இரண்டு நாள்களாகத் தனது குடும்பத்தினருடனும் திமுகவின் பல்வேறு தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

முதலில் இரண்டு கேபினட் பதவியும், மூன்று இணையமைச்சர் பதவியும் மட்டுமே தரமுடியும் என்கிற காங்கிரஸின் நிபந்தனையைத் திமுக நிராகரித்தது. கடந்த முறை தந்ததுபோல, இந்தத் தடவையும் மூன்று கேபினட் அமைச்சர்களும், ஐந்து இணையமைச்சர்களும் அமைச்சரவையில் தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதில் திமுக பிடிவாதமாக இருந்தது. நீடித்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு மூன்று கேபினட் பதவிகளும், தனிப் பொறுப்பில் ஒரு இணையமைச்சர் பதவியும், மூன்று இணையமைச்சர் பதவியும் தருவதாகக் காங்கிரஸ் ஒத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

டி.ஆர். பாலு மற்றும் ஆ. ராசா கேபினட் அமைச்சர்களாக இருக்கும்போது தான் மட்டும் தனிப் பொறுப்புடனான இணையமைச்சராக இருக்க முடியாது என்றும், தனக்குக் கேபினட் அந்தஸ்து தரப்படாவிட்டால் அமைச்சரவையில் சேரப் போவதில்லை என்றும் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி போர்க்கொடி தூக்க, சுமுகமாக முடிந்திருக்க வேண்டிய பதவிப் பேரம் மேலும் சிக்கலானது.

ஏற்கெனவே கேபினட் அந்தஸ்துடன் இருந்து வந்த தயாநிதி மாறன், டி.ஆர். பாலு மற்றும் ஆ. ராசா ஆகியோரில் யாரையும் தனிப் பொறுப்புடனான இணையமைச்சராக்க முடியாத தர்ம சங்கடம் திமுக தலைமைக்கு ஏற்பட்டு விட்டது.

அதுமட்டுமல்லாமல், அழகிரிக்குக் கேபினட் பதவி தரும்போது, கனிமொழிக்குத் தனிப்பொறுப்புடனான இணையமைச்சர் பதவி தந்தாக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்த மாறன் சகோதரர்களையும் ஒதுக்கித் தள்ள முடியாத சூழ்நிலையும் திமுகவின் தர்மசங்கடத்துக்குக் காரணம்.

அழகிரி மற்றும் தயாநிதி மாறனுக்குக் கேபினட் அந்தஸ்து தரப்பட்டாக வேண்டும் என்ற நிலையில், ஒதுக்கப்பட்ட மூன்று இடங்களில் டி.ஆர். பாலு அல்லது ஆ. ராசா இருவரில் ஒருவரைத்தான் கேபினட் பதவிக்குப் பரிந்துரைக்க முடியும் என்கிற நிலைமை. திமுகவின் உள்கட்சிப் பூசலால் எந்தவித முடிவும் எடுக்க முடியாததால், அமைச்சரவைப் பதவிப் பிரமாணத்தை இரண்டு கட்டமாக நடத்த வேண்டிய நிர்பந்தம் பிரதமருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே. நாராயணன் முதல்வருடன் இலங்கைப் பிரச்னை மட்டுமல்லாமல், திமுகவின் உள்கட்சிப் பிரச்னைக்கும் தீர்வு காண்பதில் உதவியதாகக் கூறப்படுகிறது. இதன் முடிவில், கேட்கும் இடங்கள் கிடைக்காததால், கடந்த அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவுக்கு இந்த முறை அமைச்சர் பதவி அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

அதற்குப் பதிலாக அவருக்கு மக்களவை துணைத் தலைவர் பதவியைக் கேட்டுப் பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், கனிமொழி தனிப் பொறுப்புள்ள இணை அமைச்சராகவும், மேலும் 3 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்கக் கூடும்.

தொழிலதிபர் ஜகத்ரட்சகன், காந்தி செல்வன் மற்றும் ஹெலன் டேவிட்சன் ஆகிய மூவரின் பெயர்கள் இணையமைச்சர் பதவிக்குத் திமுகவால் பரிந்துரைக்கப்படலாம் என்று தெரிகிறது.

சோனியா- மன்மோகன் ஆலோசனை: இதனிடையே, ஏற்கெனவே பிரதமர் உள்பட 20 பேர் பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை செய்தனர்.

முதல் தடவையாக எம்.பி. ஆகியிருக்கும் யாருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கக் கூடாது என்று ராகுல் காந்தி கூறுவதாகத் தெரிகிறது. ஆகவே, சச்சின் பைலட், மிலிந்த் தேவ்ரா போன்று கடந்த மக்களவையில் திறமையாக பணியாற்றியவர்கள் பலர் இணையமைச்சர்களாக வாய்ப்பு காணப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் திமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி விழுந்து விடவில்லை. திமுகவின் தயவில்லாமலேயே பெரும்பான்மை பலமிருக்கும் தங்களை வற்புறுத்தி இத்தனை அமைச்சரவைப் பதவிகளைப் பெறும் திமுக, தங்களது ஆதரவில் ஆட்சியில் இருக்கும்போது, தமிழக அமைச்சரவையில் கணிசமான அமைச்சர் பதவிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுக்கிறது.

தாங்கள் கேட்கும் துறைகள் ஒதுக்கப்பட்டு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்த சில நாள்களில் போர்க்கொடி தூக்குவார்கள் என்று தெரிகிறது. இதைக் காங்கிரஸ் தலைமையே மறைமுகமாக ஆதரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment