Pages

26 May 2009

சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன என்று இந்திய ஊடகமான ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போர்க் குற்றச்செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன.

சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மனித உரிமை சபையின் சிறப்பு விவாத்தில் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரித்தானியாவும் டென்மார்க்கும் தீவிரமாக உள்ளன.

சிறிலங்காவுக்கு எதிரான விவாதத்தை மேற்கொள்ளும் பொருட்டு 17 நாடுகளின் ஆதரவுகளை டென்மார்க் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் குறைந்தது 16 நாடுகளின் ஆதரவுகளாவது தேவை.

வன்னிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்தே இந்த விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆனால், தனது நட்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ரஸ்யா, சீனா, கியூபா, எகிப்து, சவூதி அரேபியா, நிக்கரகுவா, பொலிவியா ஆகிய நாடுகளின் ஆதரவுகளுடன் இந்த தீர்மானத்தை முறியடிக்கப் போவதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவிலும் கனடாவிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்வதால் அவர்கள் சிறிலங்காவுக்கு எதிரான தீவிர போக்கை கொண்டுள்ளனர்.

மோதல்களில் சிறிலங்கா படையினர் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகெலை செய்ததாக அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment