Pages

29 May 2009

ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை

"ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை" என தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பஞ்சாப் பற்றி எரிகிறதே, அங்கே மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குகிறதா? சமீபத்தில் பஞ்சாபில் நடக்கும் கலவரங்களைக் கேள்விப்பட்ட பலருடைய எண்ண ஓட்டமும் இதுவாகத்தான் இருக்கிறது.

பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டிய கதையாக, எங்கோ ஐரோப்பாவில் உள்ள வியன்னாவில் நடந்த சம்பவம், இங்கே பஞ்சாபில் வன்முறையைக் கிளப்பியிருக்கிறதே, அது ஏன்? இந்தப் பிரச்னையின் பின்னணி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஜாதியத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்து சமுதாயத்தின்மீது ஏற்பட்ட அதிருப்தியால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில் ஒன்றுதான் சீக்கிய மதம்.

மனிதனை மனிதன் ஏற்றத்தாழ்வு கூறி பாகுபடுத்துவதை எதிர்த்து அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் முன் சரிசமம் என்பதையும், எங்கும் நிறைந்த அந்தப் பரம்பொருளுக்கு உருவமில்லை என்பதையும் நிலைநாட்டும் விதத்தில் குருநானக்கால் உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தின் அடிப்படை, ஆதாரம் எல்லாமே குருகிரந்த சாஹிப் என்கிற அவர்களது வேதம் மட்டுமே.

ஜாதியத்தின் தடைகளை உடைத்தெறிய மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் எப்படி வேறு சில மதங்களில் பழைய ஜாதிய கண்ணோட்டத்துடன் நடத்தப்படுகிறார்களோ அதே அனுபவம்தான் சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சந்த் ரவிதாஸ் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரலை உயர்த்தியவர். இவரது பல உபதேசங்கள் குருகிரந்த சாஹிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

உயர் ஜாதி சீக்கியர்கள் சந்த் ரவிதாஸ் குருநானக்கின் சீடராகக் கருதுகிறார்கள். ஆனால் ரவிதாஸின் சீடர்களோ அவரையே குருவாகக் கருதுகிறார்கள்.

1920-ல் மங்குராம் என்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஜாதி சீக்கியருக்கு எதிராக ரவிதாஸரை முன்னிறுத்தி ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நில உடைமையாளர்களாவது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது.

மங்குராமைத் தொடர்ந்து பல தாழ்த்தப்பட்ட சமுதாய இயக்கங்கள் தோன்றிவிட்டன. சச்கண்ட் என்று அழைக்கப்படும் இந்த இயக்கங்கள் தாழ்த்தப்பட்டவர்களை இணைப்பது மட்டுமல்லாமல், சீக்கிய மதத்திலேயே ஒரு தனி அமைப்பாகவும் கலந்துவிட்டிருக்கின்றன. சீக்கிய மதத்திலும் தேராசச்சாசௌதா, தேராசச்கண்ட் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.

ஜாதி சீக்கியர்களின் சபையாக இருப்பது எஸ்.ஜி.பி.சி. எனப்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி. இதுதான் எல்லா சீக்கிய குருத்வாராக்களையும் இணைத்து மேலாண்மை செலுத்தும் அமைப்பு.

அமிருதசரஸ் பொற்கோவிலில் தான் இதன் தலைமையகம். ஏறத்தாழ, வாட்டிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்றது இது எனலாம். இதில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் ஆங்காங்கே செயல்படுகின்றன.

அநேகமாக பஞ்சாபிலுள்ள எல்லா ஊர்களிலும் எஸ்.ஜி.பி.சி.யின் குருத்வாராவும் தாழ்த்தப்பட்டவர்களின் குருத்வாராவும் காணப்படுகின்றன.

இப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் ஜாதி சீக்கியர்களைப்போலவே வசதி பெற்றவர்களாகிவிட்டனர். உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றனர். இவர்களது வளர்ச்சி தங்களுக்குச் சவாலாக அமையும் என்று கருதுகிறது எஸ்.ஜி.பி.சி. காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் துணையுடன் இந்தத் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் மீது ஜாதி சீக்கியர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதுதான் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஞானி ஜெயில்சிங் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர் எவரும் அரசியல் முக்கியத்துவம் பெறவில்லை.

சமீபகாலமாக காங்கிரஸ் தனது அரசியல் எதிரியான அகாலிதளத்தை வீழ்த்த இந்த தேரா அமைப்புகளைத் தூண்டி விடுகிறது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆளும் அகாலிதளத்தின் ஆதரவுடன் எஸ்.ஜி.பி.சி. இந்தத் தேரா அமைப்புகளை ஒடுக்க நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இத்தனை நாளும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த ஜாதிப் பிரச்னை இப்போது எரிமலையாக வெடித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவு எளிதாக இந்த எரிமலை அடங்கிவிடாது. அரசியல் கட்சிகள் அடங்க அனுமதிக்கவும் மாட்டார்கள்.

எங்கோ வியன்னாவில் தேராசச்கண்ட் தலைவர் நிரஞ்ஜன்தாஸ் கொலை செய்ய காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. பிரதமர் பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 கிலோ மீற்றர் தூரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி அனாதைகளாய், சொந்த மண்ணில் அகதிகளாய் அல்லல்படுகிறார்கள். கேட்க நாதியில்லை. நமக்கும் கவலையில்லை; இது காலத்தின் கேவலமான கோலமல்லவா?" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தினமணி'

No comments:

Post a Comment