26 April 2009

ஈழம் கோரிக்கை இன்னும் தீவிரமடையப் போகிறது - பொஸ்ட்டன் குளோப்


கடந்த கால்நூற்றாண்டு காலமாக தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கான சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுப்பதன் மூலம் தமிழர்களுக்கு தனிநாட்டுக் கோரிக்கையைக் கைய்யிலெடுப்பததை த்தவிர வேறு எந்த மார்க்கத்தையும் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசுகள் விட்டு வைக்கவில்லை என்று கடந்த சனிக்கிழமை பிரசுரமான பொஸ்ட்டன் குளோப் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.

" புலிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் மகிந்த சகோதரர்கள் முன்னெடுக்கும் போரில் பாதிக்கப்பட்ட பெரும்பானமையானவர்கள் தமிழ்ப் பொதுமக்கள்தான்" என்றும் அது கூறுகிறது.

அக்கட்டுரையின் முழுவடிவமும் கீழே தரப்படுகிறது.

சிறிலங்காவில் நடக்கும் துயரம்.

உலகிலேயே நீண்டதும், ரத்தக்களரியை ஏற்படுத்தியதுமான போராட்டங்களில் ஒன்றான சிறிலங்காவின் இனப்போர் கிட்டத்தட்ட ஒரு கொடூரமான முடிவை அடையும் தறுவாயிலிருக்கிறது. அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் தமிழ்ப் புலிகளுக்கெதிராக அரசு நடத்து ஈவிரக்கமற்ற போரில் இதுவரை 6500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்,

இன்னும் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா வின் அறிக்கை கூறுகிறது. ஒபாமாவின் நிர்வாகமும், சீனா, இந்தியா உற்பட்ட ஏனைய சர்வதேச நாடுகளும் போரில் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வேறிடங்களுக்குப் போவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மோதலை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்களுக்காக அரசாங்கமும், புலிகளும் விசாரிக்கப்பட வேண்டி வரும் என்று எச்சரிக்கை ஒன்றை விடுவதன் மூலம், இவ்வாறான மனித நேய நிவாரண வேலைத் திட்டத்தை முன்னெடுப்போர் தமது சேவைகளை வழங்குவது கைகூடும். அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் கருத்துப்படி இருதரப்பினருமே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

தமது போர்குற்றங்களை மறைப்பதற்காகத்தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவர் தம்பியான கோத்தபாய ராஜபக்ஷேயும் போர் நடைபெறு பகுதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களையோ அல்லது சர்வதேச செய்தியாளர்களையோ அனுமதிப்பதை தடை செய்து வைத்திருக்கின்றனர் என்பது வெளிப்படை.

ஒரு லட்சம் தமிழர்கள் போதிய மருந்துகளின்றியும், உணவின்றியும், தங்குவதற்குக் கூடாரங்களின்றியும் இருக்க, இன்னும் ஐம்பதினாயிரம் பேர் 5 சதுர மைல் பிரதேசத்துக்குள் அடைபட்டு தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்குள் அகப்பட்டிருந்த போது சர்வதேசம் எதுவுமே செய்ய முடியாத வக்கறுந்த நிலையில் இருந்தது என்பது ஐ.நா வால் 2005 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட "எந்த மக்கள் தமது சொந்த அரசாங்கங்களால் பாதுகாக்கப்பட முடியாதர்களாகவிடுகிறார்களோ அவர்கள் சர்வதேசத்தால் பாதுகாக்கப்படவேண்டிய உரிமையைக் கொண்டிருக்கிறார்கள்" எனும் தீர்மானத்திலிருந்து சர்வதேசம் தவறிவிட்டதைத்தான் காட்டுகிறது.

கடந்த வியாழக்கிழமை தான் ஒரு மனிதாபிமான நிவரணப் பணிக்குழுவை போர் நடைபெறும் பகுதிக்கு அனுப்பியதாகக் கூறிய ஐ.நா செயலாளர் பான் கீ முன் பாராட்டப்பட வேண்டும்." பெருமளவு உயிர்கள் அங்கு பலியிடப்பட்டிருக்கின்றன" என்று அவர் சொன்னார்."பொறுப்பதற்கு இனி நேரமில்லை". ஐ.நா செயலரின் முயற்சியை வரவேற்கும் அதே நேரம், அவரின் இந்த முயற்சி மிகவும் தாமதிக்கப்பட்ட பின்பே வருகிறது என்பதையும், காப்பாற்றப்படக்கூடிய பெருமளவு உயிர்கள் அநியாயமாகப் பலியிடப்பட்ட பின்னரே இது தொடங்கப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டுதல் அவசியம்.

ராஜபக்ஷே சகோதரர்கள் புலிகள் மேல் நடத்தும் காட்டுமிராண்டித்தனமான போர் உண்மையிலேயே மொத்தத் தமிழினத்தின்மேலான இன அழிப்புப் போராக இருந்த போதும் அதை அவர்கள் "பயங்கரவாதிகளுக்கெதிரான போர்" என்ற போர்வையில் வரிந்து கட்டி தப்பி விடுகிறார்கள். அவர்களின் பிரச்சாரம் வெற்றியளிப்பதற்கான காரணம், அது அரைவாசி உண்மையில் கட்டப்பட்டது.ஏனென்றால் புலிகள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனாலும் மகிந்த சகோதரகள் நடத்தும் போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பொதுமக்களே.

புலிகளின் போராட்டம் இனிவரும் சில நாட்களில் நசுக்கப்படலாம், ஆனால் தமிழர்களின் கோபமும், சிறிலங்காவிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்வதும் இன்னும் இன்னும் கூர்மையடையப் போகிறது. சிறிலங்காவின் இனப்போருக்கு இறுதியான தீர்வு அரசியல் ரீதியானதாக இருக்கவேண்டுமேயொழிய ராணுவ ரீதியினால் அல்ல. ஒன்றுபட்ட இலங்கையினுள் தமக்கு சுய நிர்ணய அங்கீகாரத்திர்வொன்றைப் பெற தமிழர்களால் முடியாதுபோனால் அவர்கள் தனி நாட்டுக்கான கோரிக்கையை முன்னெடுப்பதைத் தடுக்க முடியாது - இதுதான் புலிகளின் இலட்சியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment