Pages

25 April 2009

அல்லல்படும் மக்களை கவனிப்பது யாரோ


கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வவுனியாவரும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக அரச நிர்வாகத்தால் செய்யப்படும் உதவிகள் மிகவும் மோசமடைந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே வரும் மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபரால் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நடைமுறையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. வந்துசேரும் மக்களுக்கு உதவுவதற்கு ஒரு விசேட செயலணியோ, நிர்வாக கட்டமைப்போ இதுவரை மாவட்ட செயலகத்ததால் நியமிக்கப்படவில்லை. மாவட்ட செயலகத்திலுள்ள வளங்கள்கூட இத்தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றதா என்னால் அதுவும் இல்லை. அவரவர் தமது தேவைக்காக எந்த முகாமில் தமது உறவினர் இருக்கிறார்களோ அவர்களை பார்வையிட சாரதி சம்மதித்தால் சரி அந்தந்த பணியாளர்களுக்கான தேவைக்காக முகாங்களுக்கு வாகனம் சென்றுவிடுகின்றது. அப்படியானால் ஒட்டுமொத்த மக்களின் தேவைகளை நிறைவுசெய்வது யார்? நேற்றுக்கூட மாவட்ட செயலகத்தில் செயலகத்திலுள்ள வெற்று சோடாப்போத்தல்கள் சேகரிக்கப்பட்டு நீர்நிரப்பபட்டு மாவட்ட தலமை அதிகாரியால் (Head Quarters) ஒரு பிக்கப் வாகனத்தில் ஓமந்தைக்கு கொன்டு செல்லப்பட்டது. திரும்பிவரும்போது வாகனத்தை நோக்கி சிறுவர்கள் தண்ணீர் தண்ணீர் என்று ஓடிச்சென்றுள்ளனர். ஒரு சாதாரண பணியாளர் செய்வதைபோல ஒரு மாவட்ட தலமை அதிகாரியே போத்தல் தேடி நீர் நிரப்பி எத்தனைபேரின் குடிநீர் தேவையை நிறைவுசெய்ய முடியும்? இதுதான் “மனிதாபிமான மீட்பு நடவடைக்கையா?. “யானைப்பசிக்கு சோளப்பொரியா” அண்ணளவாக ஒரு இலட்சம் மக்களுக்கு இதுவா திட்டம்.ஐ.நா நிறுவனங்களும் ஓமந்தைக்கு செல்லமுடியாது. அரச நிர்வாகமே உடனடியாக உணவு, குடிநீர் தேவைகளை நிறைவுசெய்யவேண்டும்.

1. மாவட்ட செயலகத்தின் உணவு விந்யோகத்தை பார்த்தால் மாவட்ட கணக்காளர் ஒப்பந்தம் போடுபவராகவே உள்ளார். 50000பாசல்களுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது ஆனால் 10000பாசல்களே ஒமந்தையை வந்தடைவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் இங்கே என்ன நடைபெறுகிறது? இவற்றை கண்காணிக்ககூட நிர்வாகத்தால் இயலாதா? அவலப்பட்ட மக்களின் உணவிலா மோசடி!
2. ஓமந்தைககு சென்றால் அங்கே காசுள்ளவர்கள் காசைநீட்டி தண்ணீர் தண்ணீர் என கைகூப்பி வணங்குகின்றனர் இந்த அவலத்தை யாரேனும் பார்கமுடியுமா? சென்றவர்களால் தண்ணீர்கூடி வாங்கி கொடுக்க முடியாதவாறு தடி, செருப்பு காட்டி காவலர்களால் துரத்தப்படுகின்றனர்.
3. இதனிடையே இம்மக்களின் அரச நிர்வாக தலைவர்களான கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள்கூட இங்கேதான் இருக்கிறார்கள் அவர்களும் செயற்பட முடியாதவாறு அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இருந்தும் முல்லைமாவட்ட அரச அதிபரால் சொந்தப்பணத்தில் 2000உணவு பாசல்கள் தயாரிக்கப்பட்டு கொண்டு சென்று வழங்கப்பட்டுள்ளது. இதுபோலாவது மற்றவர்கள் முயற்சிக்கலாம்.
4. கொண்டுவரப்படும் மக்கள்கூட இறக்கப்படாமல் பலமணிநேரம்(4-8மணித்தியாலயங்கள்) பஸ்களிலேயே அடைக்கப்பட்டிருப்பதால் அவர்களில் பலர் மயக்கமடைந்தும் சிறுவர்கள் சிலர் இறந்தும் உள்ளார்கள் இவையாவும் கற்பனையல்ல நிஜம் “ஊடகவியலாளர்களே! கிளிநொச்சிக்கு சென்ற உங்களுக்கு வவுனியா அவலம் புரியவில்லையா”?
5. நேற்று முந்தினம்கூட மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட மாநாடு இடம்பெற்றது ஆனால் எந்த வேகமும் இல்லை.
6. செயலகத்திற்குவரும் உணவு, குளிர்பானங்களை பெற்று மக்களுக்கு வழங்குவதற்குரிய கட்டமைப்பே உருவாக்கப்படவில்லை வரும் பொருட்கள் வாகனங்களில் மாற்றப்படும் பின்னர் கணக்காளர் இல்லை என காத்திருப்பு பின்னர் மாலையளவில் செல்லும் இதுதான் தற்போதைய மாவட்ட நிர்வாக கட்டமைப்பு.
7. ஆழிப்பேரலை அனர்தத்தின்போதே இவளவு கஸ்டங்களை மக்கள் அனுபவிக்கவில்லை அங்கே நல்ல நிர்வாக அமைப்பிருந்தது. அந்த கட்டமைப்பை நிர்வகித்த அரச அதிகாரிகள்கூட இங்கேயும் வந்திருக்கிறார்கள் ஆனால் மாவட்ட நிர்வாகத்தால் அவர்களை சரிவர பயன்படுத்தமுடியவில்லை.
8. ஓமந்தையில் இப்படியென்றால் தற்காலிக முகாங்களில் நிலமையும் அதேகதிதான் ஒருவர் குளிப்பதற்கு 10லீற்றர் நீர்தான் அதற்கும் நீண்டவரிசையில் காத்திருக்கவேண்டும் இவற்றால் வெப்பத்தால் உருவாகும் அம்மைநோய் பெருமளவானோருக்கு தொற்றியுள்ளது. இவற்றைஅறிய வேண்டுமானால் ப:வரசங்குளம் வைத்தியசாலை தகவல்களே சொல்லும்.
9. ஐ.நா நிறுவனங்கள் பலமுறை ஓடித்திரிவதிலும், கூட்டங்களை நடாத்துவதிலும் காலங்கடத்துகின்றன. சில நிறுவனங்கள் முகாங்களுக்கு உணவைவிட நிறையுணவிற்காக மேலதிக போசாக்குணவை வழங்கிவருவது பாடாட்டுக்குரியது இருந்தாலும் உணவே இல்லாதிருப்போரை முதலில் கவனியுங்கள் பின்னர் நிறையுணவு வழங்கலாம்.
10. வந்தவர்களை கேட்டால் அங்கே உயிருக்கு பயம் அதுதான் வந்தோம் ஆனால் இங்கே உயிரைவிட எதுவுமேயில்லை என கவலையோடு சொல்கிறார்கள் ஒன்றுமட்டும் உண்மை அங்கேயுள்ள மனிதாபிமான பயணக்ககைதிகைளை மீட்டு இங்கேயுள்ள முட்கம்பி சிறைச்சசாலை கைதிகளாக்கும் அரசின் திட்டம் ஓரளவு வெற்றியளித்தது.

இவ்வண்ணம்
பாவப்பட்டவர்கள் சார்பில்
த.வரதராசா

Thanks Nerudal.com

No comments:

Post a Comment