

திண்டுக்கல்: தண்ணீர்,சோலாரை பயன்படுத்தி சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில் காரை இயக்கக்கூடிய கருவியை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.,பொறியியல் கல்லூரி பி.இ., (எலக்ட்ரிக்,எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்)இறுதி ஆண்டு மாணவர்கள் பூபாலகிருஷ்ணன்(22), பாலமுரளிதரன்(21), பூவனேஸ்வரன்(25),பெனிட்டோ(21).இவர்கள் 4 பேரும் நாட்டின் எரிபொருள் தேவை,சுற்றுப்புற சுகாதாரத்தை காக்கும் வகையில் சோலார்,தண்ணீர் மூலம் காரை இயக்கக் கூடிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக வடிவமைக்கப்பட்ட கருவியின் மேற்பகுதியில் சோலார் தகடுகள் பொருத்த வேண்டும்.இதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் உள்ளே வைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஹைட்ரஜன்,ஆக்சிஜன் என தனியாக பிரிக்கப்பட்டு டேங்கில் சேமிக்கப்படுகிறது. இவற்றை மின் ஆற்றலாக மாற்றும் சாதனத்தில் செலுத்தும் போது மின்சாரம் உற்பத்தியாகிறது.இந்த மின்சாரத்தை மின் மோட்டாரில் செலுத்தினால் இந்த கருவி இயங்கும் . ஒரு லிட்டர் தண்ணீரில் 110 லிட்டர் ஹைட்ரஜன்,55 லிட்டர் ஆக்சிஜன் கிடைக்கும்.இதற்காக உபயோகப்படுத்தும் தண்ணீர் நன்கு சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: சோலார் செல்,வேதி மின்மாற்றி,ஹைட்ரஜன், ஆக்சிஜன் பிரித்து சேமிக்கும் டேங்க், மின் மோட்டாரை பயன்படுத்தி இதை செய்துள்ளோம். காரை இயக்க பயன்படும் இந்த கருவியை தயாரிக்க நாங்கள் ரூ.11 ஆயிரம் செலவழித்துள்ளோம். காந்திகிராமம் பல்கலைக்கழகம், அமெரிக்காவிலுள்ள எல்ரேம்ப் நிறுவனமும் எங்களது கண்டுபிடிப்பிற்கு உதவி செய்ய உள்ளனர்.இந்த கருவியை பயன்படுத்தி 4 பேர் அமர்ந்து செல்லக்கூடிய காரை தயாரிக்க ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்றனர்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment