Pages

29 April 2009

மழை விட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான் : கலைஞர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

எனது உண்ணாவிரதப் போராட்டம், எனக்கு முழு திருப்தியை அளித்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் என நம்புகிறேன்.

மழை விட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். அதைப் போலத்தான் இலங்கையில் இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்.

போர் நிறுத்தம் கோரி 2 மாதங்களுக்கு முன்பே உண்ணாவிரதம் இருக்க நான் முடிவு செய்தேன். ஆனால் திருமாவளவன், கி. வீரமணி, ராமதாஸ் ஆகியோர்தான் அந்த முடிவைத் தடுத்தனர்.

தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சியினருக்கு தேர்தல் களத்தில் பேசுவதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதனால்தான் இலங்கைப் பிரச்னையைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆனால் தேர்தல் முடிவுகளை இலங்கைப் பிரச்னை எந்த அளவுக்கும் பாதிக்காது.

தனி ஈழம்: தனி ஈழத்தை மோசமாகத் தாக்கிப் பேசியவர்கள் இன்று ஆதரிக்கிறார்கள். தேர்தல்தான் அதற்குக் காரணம். தி.மு.க.வைப் பொருத்தவரை 50 ஆண்டு காலமாக தனி ஈழத்தை ஆதரித்து வந்திருக்கிறோம். பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

இப்பிரச்னையில் இன்றைய சூழலில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையே, எங்களது நிலையும் ஆகும். சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை கிடைத்திட வேண்டும் என்பதே அது.

அதையும் மீறி தனித் தமிழ் ஈழம்தான் வேண்டும் என தமிழ்ப் போராளிகள் போராடி வெற்றி பெற்றால், அதுவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான்.

போராளிகளும், இலங்கை அரசும் உட்கார்ந்து பேசி, தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் எந்தத் தீர்வு ஏற்பட்டாலும், அது வரவேற்கக் கூடியதே.

இப்போதைய போரில் ஒருவேளை விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டாலும் கூட, புல், பூண்டுகள் அழிந்த மண்ணில், மீண்டும் புதிய செடிகள் முளைப்பதைப் போல புதியவர்கள் பிறப்பார்கள். அதுதான் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வரலாறு.

சூழலுக்கேற்ப ஒப்பந்தம்: ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே இடையேயான இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை இன்று அப்படியே அமல்படுத்த முடியாது. காலத்துக்கேற்ப மாற்றம் செய்ய வேண்டும். அதில் திருத்தங்களைச் செய்த பிறகே அமல்படுத்த முயல வேண்டும்.

இன்றைய சூழலில் எத்தகைய ஒப்பந்தம் தேவை என்பது குறித்து நாங்கள் ஏற்கெனவே அமைத்துள்ள நீதியரசர் குழுவுடன் விவாதித்து, அதை மத்திய அரசு மூலம் நிறைவேற்ற முயற்சி செய்வோம்.

இலங்கையின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இதனால் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல; இலங்கை மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மன்மோகன் சிங்கே பிரதமர்... மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான இப்போதைய கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். மன்மோகன் சிங்கே மீண்டும் பிரதமர் ஆவார். அவரைத் தவிர வேறு யாரையும் பிரதமராக ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

மத்தியில் இடதுசாரி கட்சிகள் ஆதரவு கிடைத்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால், அத்தகைய அரசில் இடம்பெறுவது பற்றி தேர்தலுக்குப் பின் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூடி முடிவு செய்யும்' என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment