Pages

15 April 2009

3 மாதத்தில் ச‌ட்ட‌‌சபைக்கு தேர்தல் வரும் : ராமதாஸ்

”3 மாதத்தில் தமிழக‌ சட்டசபைக்கு தேர்தல் வரும்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

தர்மபுரி‌யி‌ல் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபையில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் எந்த நாட்டில் இருந்தார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அன்றைய தினம் பா.ம.க.வின் 19 உறு‌ப்‌பின‌ர்களு‌ம் அந்த தீர்மானத்தை எதிர்த்து முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் சட்டசபையில் அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ம.க.வின் 19 உறு‌ப்‌பின‌ர்களும் கறுப்பு சட்டை அணிந்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அன்றைய தினம் கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் அமைதியாக நடுநிலைமை வகித்து உட்கார்ந்திருந்தனர்.

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழர் பேரணியில் கருணாநிதி ‘அடிமையாக இருக்கிறோம்’ என்று கூ‌றியுள்ளார். அவர் யாருக்கு அடிமை என்பதை தெளிவாக விளக்க வேண்டும். அவ்வாறு கருணாநிதி அடிமையாக இருந்தால் அவரை மீட்க நாங்கள் முயற்சி செய்வோம். இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி சோனியா காந்தியிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலின் போது காங்கிரசுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அவர் தெரிவித்து இருக்க வேண்டும்.

நாங்கள் மாறி மாறி கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவித்து விட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். எங்களுக்கு பதவி சுகம் என்பதற்கு அர்த்தமே தெரியாது. 1989-ம் ஆண்டு பா.ம.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் கட்சியை கருணாநிதி அழிக்க நினைத்தார்.

மேலும் கூட இருந்தே குழி பறிக்கும் செயலில் ஈடுபட்டதால் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தொண்டர்கள் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தி யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என முடிவு செய்தோம். கட்சி தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வைக்க முடிவு செய்தனர்.

தி.மு.க.வின் ஆட்சி இந்தத் தேர்தலோடு முடியும். இன்னும் 3 மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது” எ‌ன்று கூ‌றினா‌ர்.

No comments:

Post a Comment