Pages

09 March 2009

அசட்டு தைரியத்தில் திமுகவும், காங்கிரசும் கூட்டணி - ஜெயலலிதா


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா பேசுகையில்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு ராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் இலங்கை சென்றதாகவும் கூறப்பட்டது. அதையும் மத்திய அரசு மறுக்கவில்லை, திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மத்தியில் அங்கம் வகிக்கும் திமுக மந்திரிகள் ராஜினாமா செய்வதாக மிரட்டிக் கூட பார்க்கவில்லை. இதுபற்றி கேள்வி கேட்ட என்னை கருணாநிதி கேலி செய்கிறார். இது முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இது கூட ஜெயலலிதாவுக்கு தெரியவில்லையே என்றார்.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு ஹரியானா மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிநவீன சாதனங்களை வைத்து இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்திய அரசு ஒப்புதலுடன் தான் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இலங்கை இனப் படுகொலை மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு நடக்கிறது. இந்த இனப் படுகொலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் பெரும் பங்குண்டு. சட்டசபையில் தீர்மானம் போட்டதாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி. தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்கிறார். கருணாநிதியின் பாசாங்கு தீர்மானங்களை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?.

ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ராணுவ உதவிகள் வழங்குவது வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்தியா வழங்கும் ஆயுத உதவியும், பயிற்சியும் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இலங்கைக்கு வழங்கப்படும் முழு ஆயுத பலத்தையும் அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். இலங்கை ராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறலாம். ஆனால் அங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்த்தால் புலிகள், போராளிகள் தவிர அப்பாவி மக்களும் பலியாவது தெரிய வருகிறது..

இந்தியா வழங்கிய துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அப்பாவி தமிழர்களை கொலை செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினையில் திமுக அரசும், மத்திய அரசும் செயல்பட்டு வரும் விதத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

இலங்கையில் அவதிப்பட்டு வரும், அல்லல்பட்டு வரும் அங்குள்ள தமிழர்கள் குறித்து கருணாநிதிக்கு அக்கறை இல்லை. இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று அவரிடம் கேட்டால், மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு மாநில முதல்வரால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார் கருணாநிதி.

தமிழகத்தைச் சேர்ந்த 10 மத்திய மந்திரிகள் உள்ளனர். அவர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் என்ற பிரம்மாஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்தமாட்டார். அறிக்கை மட்டும் விடுவார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம். ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இலங்கை அதிபருடன் நம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்றார். பின்னர் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத் தயார் என்று அறிவித்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கோ, அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கோ அக்கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக அவர் நிர்ணயித்த கெடுவான கடைசி தேதியை முடிவுக்கு வரவிட்டு, பின்னர் அந்த ராஜினாமா கடிதங்களை தானே கிழித்து போட்டு விட்டார்.

இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

எனவே கருணாநிதியின் முழு ஆசி மற்றும் தூண்டுதலின்பேரில்தான் இருவரும் பேசினர். அதுவே அவர்களை சிக்கலில் மாட்டி விட்டு விட்டது.

பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உண்மையி்ல் சீமான் என்ன மாதிரியெல்லாம் பேசினாரோ அதையே கருணாநிதியும் பேசியுள்ளார். அவர் என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தினாரோ அதையெல்லாம் கருணாநிதியும் பயன்படுத்தியுள்ளார்.

எந்த வார்த்தைகள் அவர்களை இன்று சிக்கலில் மாட்டிவிட்டதோ, அவை யாவும் கருணாநிதியின் ஆசியும் ஒப்புதலும் பெற்றவை தான்.

ஆனால் சீமானுக்கு மட்டும் சிறைத் தண்டனை. ஆனால் கருணாநிதியோ தலைமை பீடத்தில் அமர்ந்து கொண்டு அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று நாம் உண்ணாவிரதம் இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும், இது போன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கிற விதம், தமிழக மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.

ஒரு அசட்டு தைரியத்தில் திமுகவும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன. வரும் தேர்தலில் மக்கள் இந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டப் போகிறார்கள் என்றார் ஜெயலலிதா.

மேலும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment