Pages

29 March 2009

திமுக ஆட்சி ஈழத்தமிழருக்காக கலைக்கப்படவில்லை: ராமதாஸ்

இலங்கை தமிழர்களுக்காக, இரண்டுமுறை ஆட்சியைப் பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று கலைஞர் கூறிவருகிறார். இரண்டு முறை ஆட்சியை இழந்தது ஈழத் தமிழர்களுக்காகவா? என்பதை அலச வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசான காங்கிரஸ் அரசால், அன்றைய தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

பிறகு, ஆட்சி கலைப்புக்கு என்ன காரணம்? நெருக்கடி நிலைக்கு எதிராக தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் மிகவும் கோபம் கொள்கிறார். அதைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி ஆட்சி கலைக்கப்படுகிறது.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

1983-ம் ஆண்டில் தான், இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது, கலைஞர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

பதவியை ராஜினாமா செய்யும்படி அப்போது யாரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை. அவராகவே ராஜினாமா செய்தார்.

இந்திய அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறி விட்டது; எத்தனையோ வெளிநாடுகளின் பிரச்சினையை ஐ.நா. கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாரா முகமாக இருந்துவிட்டது.

நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது என்றெல்லாம் குற்றம்சாற்றி ராஜினாமா செய்தார்.

ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே மேல் சபைக்கு போட்டியிட்டு உறுப்பினராகிவிட்டார் என்பது வேறு விவகாரம்.

அதற்கு பின் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி கண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது.

37 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சியை இந்திராகாந்தியின் துணையுடன் கலைத்தார்.

அடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார். இது வரலாறு.

1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? வி.பி.சிங்குடன் மிக நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, அப்போது தி.மு.க. அரசு ராஜீவ்காந்தியின் ஆசியோடு கலைக்கப்பட்டது.

அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில், ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதாகும்.

எனினும், அரசியலை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும், அப்போது எதற்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்று சுருங்கச் சொன்னால் இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல், டெல்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள், உருவான கூட்டணி மாற்றங்கள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் ஆட்சி பறிக்கப்படவில்லை. எனவே, ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனிமேலும் கூறினால் அதனை தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது’’ என்று தெரிவித்துள்ளார்.
Thanks Nakkheeran
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5827

No comments:

Post a Comment