Pages

12 March 2009

மூச்சுவிட மட்டும் அனுமதித்து மொத்த சுதந்திரத்தையும் முடக்கிப்போடும் வவுனியா வதை முகாம்கள்: ஆனந்த விகடன்

முதலில் நாட்டுக்குள் இருந்த ஈழத் தமிழர்களைக் குண்டு போட்டு காட்டுக்குள் விரட்டினார்கள். காட்டுக்குள் குண்டு வீசி மீண்டும் நாட்டுக்குள் துரத்தினார்கள். இரண்டு இடங்களும் இல்லாமல், இப்போது தமிழர்களைக் கொட்டடி (சிறையறை) க்குள் அடைக்க ஆரம்பித்திருக்கிறது சிங்கள அரசு. மூச்சுவிட மட்டும் அனுமதித்து மொத்த சுதந்திரத்தையும் முடக்கிப்போடும் இந்தக் கொட்டடிகளின் கதையைக் கேட்டால் அடிவயிறு அப்படியே கலங்கிப் புரள்கிறது.

ஈ, காக்காகூட உள்ளே நுழைய முடியாத கோட்டைச்சுவர்,அதைச் சுற்றிலும் இரும்பு முள்வேலிகளை மொத்தமாக சுருட்டிப் போட்டிருப்பார்கள். அரண்மனைகளைச் சுற்றிலும் அகழிகள் இருப்பது மாதிரியான, இரும்பு அகழிகள் இவை. தப்பிக்கவோ தெரியாத்தனமாக விழுந்தாலோ உடம்பைக் கிழித்துவிடும். அதற்குள் விழுந்தவரை உயிரோடு எடுக்க முடியாது. சிறுசிறு டென்ட்டுகள். இரவோ பகலோ தமிழ் மக்கள் வெளியே போகவும் முடியாது. சொந்தங்களைப் பார்க்க என்று சொல்லி யாரும் உள்ளே நுழையவும் இயலாது. சிறைக்கு இன்னொரு பெயர் அவர்கள் பாஷையில் கேம்ப்!

மிகச் சாதாரண விஷயம் குளிப்பது. அதைக்கூட கெடுக்கின்றன இவை. திறந்த வெளியில் தொங்கவிடப்பட்டிருக்கும் குழாயில் திடீரெனத் தண்ணீர் வரும். அதைக் கவனித்து ஆண்கள் காத்திருக்க வேண்டும். தண்ணீர் விட்டதும் ஓடிப் போய்க் குளிக்க வேண்டும். அவர்கள் நினைத்ததும் தண்ணீரை நிறுத்திவிடுவார் கள். குளியல் ஓவர். இதே கதிதான் பெண்களுக்கும். இராணுவ வீரர்களின் கண் பார்வையிலேயே காலைக் கடன்களைக் கழித்து, குளித்து, உடை மாற்றி... ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டும்.

துப்பாக்கி முனையில் குளியல், துப்பாக்கி முனையில் கல்வி, துப்பாக்கி முனையில் கற்பழிப்பு. 16 வயதுக்கும் 45 வயதுக்கும் உட்பட்ட ஆண்கள், பெண்கள் தனித்தனி முகாமில் வைக்கப் படுகின்றனர். எவரையும் குடும்பத்துடன் வைக்கவில்லை. திருமணம் முடித்த இளம்பெண்கள் கணவனுடனும் இளைஞர்கள் மனைவியுடனும் தங்க வைக்கப்படவில்லை. தனியாக வைக்கப் படுகின்றனர். தனியாகப் பிரிக்கப்படும் ஆண்கள் காணாமல் போகிறார்கள். இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்களாம்.

வன்னிப் பகுதியில் உள்ள பள்ளி வளாகங்கள்தான் இதுபோன்ற கேம்ப் களாக மாற்றப்பட்டுள்ளன. வேலிக்கு உள்ளே மண் தரையில் வரிசையாக 5 - 6 மீட்டர் நீளத்தில் டென்ட்டுகள். பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி எல்லாமே உள்ளேதான். மதிய வேளையில் ஒரு வேனில் சாப்பாட்டுப் பொட்டலங்கள் வரும். சாதாரணமாக ஒருவருக்கு 650 கிராம் உணவு தேவைப்பட்டால் இங்கே 300 கிராம் உணவு கிடைத்தாலே பெரிய விஷயம். குடிக்கத் தண்ணீர் கொஞ்ச மாக இருக்கும். அது காலியாகிவிட்டால் மறுநாள்தான் கொடுப்பார்கள்.

கேம்ப் புக்கு வெளியே இருக்கும் அலுவலகத்துக்கு மட்டும்தான் மின்சாரம் உண்டு. இராத்திரி முழுவதும் இருட்டுதான். வெளித் தொடர்புக்கு வழியில்லை என்பதால் இரவும் பகலும் அவர்களுக்கு ஒன்றுதான். 'மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமிழர்களைச் சித்ரவதை செய்யும் நயவஞ்சகச் சிறை இது' என்று வர்ணித்திருக் கிறது 'சண்டே லீடர்' பத்திரிகை.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி வரும் தமிழர்களைப் பாதுகாக்க வெல்ஃபேர் வில்லேஜ் அமைக்கிறோம். அதற்கு நிதி உதவி செய்யுங்கள்'' என்று பல நாடுகளிடமும் நிறுவனங்களி டமும் நிதி திரட்டி வருகிறது இலங்கை அரசு. மொத்தம் ஆயிரம் ஏக்கரில் 10 நலக் கிராமங் களை அரசு உருவாக்குவது ராஜபக்ஷேவின் திட்டம்.

மன்னார் பகுதியில் 100 ஏக்கர் பரப்பில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கும் வகையில் ஒரு மெகா முகாமை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது இலங்கை அரசு. நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் தாக்குப்பிடிக்கும் 39 ஆயிரம் தற்காலிக வீடுகள், 7 ஆயிரத்து 800 கழிப்பறைகள், 780 கழிவுநீர் தேக்கும் தொட்டி, இது தவிர பூங்கா, தபால் நிலையம், 390 சமுதாயக் கூடம், வங்கி, பள்ளிக்கூடம், நூலகம் போன்றவற்றை ஏற்படுத்தப் போகிறோம் என்று சொல்கிறது இலங்கை அரசு.

'இது கிட்டத்தட்ட தமிழ் மக்களை மூன்றாண்டுகள் சிறையில் அடைக்கும் திட்டம்' என்று விமர்சனம் செய்திருக்கும் செஞ்சிலுவைச் சங்கம், மூன்று மாதங்கள் தமிழர்களைப் பராமரிக்கத் தேவையான நிதியை மட்டும் தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இப்போது இருக்கும் தற்காலிக கேம்ப்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தீவிர விசாரணைக்குப் பிறகே முகாம்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படித் தமிழர்களை வாட்டி வதைக்க, இன்னொரு பக்கம் இந்தியா கைகொடுக்கிறது என்கிற பேச்சும் எழுந்திருக்கிறது. தமிழர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இத்தனை மாதங்கள் கழித்து, இந்திய மருத்துவக் குழு இலங்கை வருவதன் பின்னணி குறித்துச் சந்தேகம் எழுப்பி இருக்கிறது சிங்களப் பத்திரிகைகள். '

இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்ய இந்திய இராணுவத்தினர் இங்கு வந்துள்ளனர். அவர்களது சிகிச்சைக்காகத்தான் இந்தியா மருத்துவர்களை அனுப்பிவைக்கிறது. இப்போது வன்னிப் பகுதியில் பயன்படுத்தப்படும் பீரங்கிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ள போஃபர்ஸ் வகையைச் சேர்ந்தவை. மக்கள் வாழும்இடங் களில் போஃபர்ஸ் பீரங்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று போர் விதிமுறைகள் உண்டு. இது தெரிந்தே இலங்கைக்கு இந்தியா பீரங்கிகளைக் கொடுத்திருக்கிறது.

சமீபத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் பல போர்டுகளைப் பிடித்திருந்தார்கள். அதில் ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகம்... 'இந்தியாவுக்கு நன்றி!'

Thanks விகடன்

No comments:

Post a Comment