Pages

05 March 2009

தமிழக அரசை சிக்க வைக்குமா அதிர்ச்சி சி.டி

சென்னையில் ரவிக்குமார் என்கிற காவலர் தீக்குளிக்க முயற்சி! காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்... பொன்னேரியில் குப்புசாமி என்கிற ரிட்டயர்டு எஸ்.ஐ. ஒருவர் தீக்குளிக்க முயற்சி! திருநெல்வேலியில் ரிட்டயர்டு தலைமைக்காவலர் நாராயணசாமி உண்ணாவிரதம்!

மார்ச் 3... சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் திடீர் உண்ணாவிரதம்...

சென்னையிலுள்ள பல்வேறு காவலர் குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் ஐந்நூறு பெண்கள், தங்கள் குழந்தைகளைச் சுமந்தபடி ஊர்வலம். வக்கீல்களை எதிர்த்து கோஷங்கள் முழங்கின....'

என்ன இதெல்லாம் என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? வக்கீல்களுக்கும் காவல்

துறைக்கும் அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறையை அடுத்து அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்தான்!

இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம். தமிழக அரசு உண்மையில் யார் பக்கம் நிற்கிறது?' என்பதுதான் அது!

இது ஒருபுறம் இருக்க, சென்னை நீதிமன்ற வளாகத்தில் நடந்த விவகாரங்கள் பற்றி விசாரிக்க நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்திருக்கும் நிலையில், காக்கிக்கும் கறுப்பு கோட்டுக்குமான 'டக் ஆஃப் வார்' நிற்பதாகத் தெரியவில்லை!

இந்நிலையில், காவலர் நல சங்கம் என்கிற புதிய சங்கமும் உதித்திருக்கிறது. இதைத் தொடங்கியிருக்கும் முன்னாள் கூடுதல் எஸ்.பி-யான அந்தோணிசாமி (எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே இவர் போலீஸ் சங்கம் ஆரம்பித்தவராம்) நம்மிடம்,

''வழக்கறிஞர்கள் என்றால், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னது சுப்ரீம் கோர்ட். முதல் கட்ட டிரான்ஸ்ஃபர் நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். ஆனால், அதே சுப்ரீம் கோர்ட் சொன்னபடி வழக்கறிஞர்கள் மீண்டும் பணிக்குச் சென்றார்களா? அப்படியென்றால், வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டையும் விட உயர்ந்தவர்களா? அவர்களை நம்பி வழக்குகளைக் கொடுத்த அப்பாவி மக்கள் எங்கே போவார்கள்? இனிமேலும், வழக்கறிஞர்கள் குறித்து வெறும் 'அறிவுரை'யை மட்டும் தருவதை சுப்ரீம் கோர்ட் தவிர்த்து, அவர்களின் அராஜகங்களைக் கண்டிக்க வேண்டும். கடந்த 8 நாட்களாக உயர் நீதிமன்ற சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்தபடி போராட்டம் என்கிற பெயரில் போலீ ஸாரையும் அவர்களின் குடும்பத்தினரையும் மைக் கட்டி, திட்டி வருகிறார்கள் வழக் கறிஞர்கள். சட்டத்தை மதிக்கவேண்டிய அவர்களே அத்துமீறி நடக்கிறார்கள். இனி நாங்கள் அவர்களின் அத்துமீறல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை! எங்கள் பின்னால், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. சங்கம் ஆரம் பிக்கும் விஷயத்தில் பிரிந்து கிடந்த எங்களை ஒன்றுபடுத்தி இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். எங்களின் முழு பலத்தை வெளியுலகுக்குக் காட்டுவதற்காகத்தான் எங்கள் தரப்பிலான போராட்டம். உயரதி காரிகள் கேட்டுக்கொண்டதால், எங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டுக் கலைகிறோம். தொடர்ந்து வழக்கறிஞர்கள் எங்களைச் சீண்டினால், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அறிவிப்போம்!'' என்றார் அந்தோணிசாமி.

சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ''எங்கள் மீது கல்லெறிந்தவர்கள், காவல் நிலையத்தைத் தீ வைத்துக் கொளுத்தியவர்கள் ஆகியோர் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்கள் நீதித் துறையினர்? இதற்கு முன்பு, 26.11.08 அன்று சில வழக்கறிஞர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே கொண்டாடவில்லையா? 05.02.09 அன்று வைகோ, ஜி.கே.மணி போன்ற அரசியல் பிரமுகர்கள் கோர்ட் வளாகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தார்களே... கோர்ட்டுக்கு வெளியே, தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலாட்டா செய்தார்களே... ஒரு அரசு பஸ்ஸை வழிமறித்து மருத்துவமனைக்குத் திருப்பினார்களே... இலங்கைப் பிரச்னையை முன்னிறுத்தி, போராட்டம் என்கிற பெயரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் எத்தனை? இந்த அத்துமீறல்களில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் வெகு சிலரே! அவர்கள் மீது இதுவரை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிடாமல் இருப்பதுதான் மேன்மேலும் அவர்களை வன்முறையைக் கையிலெடுக்க வைக்கிறது. ஒரு தரப்பு மீது நடவடிக்கை என்கிறபோதுதான், எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருக்கிறது!'' என்கிறார்.

ஆனால், வழக்கறிஞர்கள் தரப்போ போலீசுக்கு எதிராகப் பொங்கிக் கொண்டிருக்கிறது. ஹைகோர்ட் தாக்குதல் விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக டெல்லியிலிருந்து வந்திருந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் போலீஸ் தரப்பின் வெறியாட் டங்களை சி.டி-யாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் வழக்கறி ஞர்கள் தரப்பினர். முக்கிய வழக்கறிஞர்களான பால் கனகராஜ், பிரபாகரன், கருப்பன், 'யானை' ராஜேந்திரன் போன்றோர் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லிவிட்டு கூடுதல் ஆதாரமாக சில சி.டி-க்களையும் ஸ்ரீகிருஷ்ணாவிடம் ஒப்படைத்திருக்கிறார் கள்.

இந்நிலையில், ''கோர்ட்டில் போலீஸ் தாக்குதல் நடத்தியபோது பதிவான பல காட்சிகள் அந்த சி.டி-க்களில் இருக் கின்றன. சில போலீஸார் நீதிபதியின் சேம்பரைத் தேடி வந்து தாக்குதல் நடத்திய காட்சிகள் அப்பட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில அதி காரிகள் முக்கிய வழக்கறிஞர்களைக் குறிவைத்துத் தாக்கியதும் பதிவாகியிருக்கிறது. பிரதான போலீஸ் அதிகாரி ஒருவர், நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனை லத்தியால் ஓங்கி அடிக்கும் காட்சியும் இருக்கிறது. முக்கியமான பதிவாக கோர்ட் வளாகத்துக்குள் அதிரடிப் படையும், கமாண்டோ படையும் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டிருந்தது, படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து, 'போலீஸ் நடத்திய தாக்குதல் திட்டமிடப்பட்டதுதான்' என நிரூபிக்க முடியும் என நம்புகிறது வழக்கறிஞர்கள் தரப்பு...'' என்கிறார்கள் முழு விசாரணையையும் கவனித்த நடுநிலையாளர்கள் சிலர்.

இதற்கிடையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் ஹைகோர்ட் நீதிபதிகள் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், ஜோதிமணி, சுகுணா, சுதாகர் ஆகியோரும் தங்கள் மனக்குமுறல்களைச் சொல்லியிருக்கிறார்கள். போலீஸார் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் சுகுணா காட்டியபோது, கிருஷ்ணாவுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

மொத்தத்தில் அஸ்திரம் இனி ஸ்ரீகிருஷ்ணாவின் கையில். இதற்கிடையில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் வழக்கை விசாரிக்கத் தொடங்கி இருக்கும் சென்னை உயர்நீதி மன்றம், 'ஆரம்பத்தில் போடப்பட்டிருக்கும் எஃப்.ஐ.ஆரை மாற்றி, வழக்கறிஞர்கள் கொடுத்திருக்கும் புகாரின் அடிப்படையில் புதிய எஃப்.ஐ.ஆர் போடப்பட வேண்டும்' என போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து அரசின் உயர்மட்ட அதிகாரிகளே வழக்கு வம்பு என அல்லாடுகிற சூழல் உருவாகவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Thanks விகடன்

No comments:

Post a Comment