Pages

22 December 2009

அதிகம் கோபப்படுவது யார்?


"யோவ் பெருசு, காலங்காத்தால உசுர வாங்காத, அந்த மஞ்ச கலர் பாரத்தை நிரப்பிக் குடுத்துட்டு கிளம்பு''. அரசு அலுவலகங்கள், வங்கிகளில் இதுபோன்ற எரிச்சலான வசனங்களை காதுபடவே கேட்கலாம்.

இதுமட்டுமல்ல வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்தால் பெற்றோர் கோபமாகிறார்கள். அப்பா அதட்டினால் பிள்ளைகள் எரிச்சலடைகிறார்கள். மனைவி எதிர்த்துப் பேசினால் கணவன் கோபமாகிறான். அலுவலகத்தில் மேலதிகாரியின் கட்டுப்பாட்டுக்கு அடங்க முடியாமல் அடங்கி ஒவ்வொருவரும் கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். இது அன்றாட வாழ்க்கையில் கோபம் காணப்படும் சூழல் கள்.

சமீபத்தில் கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழக சமூகத்துறை குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். `சமூக அமைப்பில் கோபத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகள் சற்று வித்தியாசமானவை.

18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில் இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள்.

அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம் கொண்டதாகவும், அதற்கேற்ற பழக்கவழக்கம் உடையதாகவும் வளருகிறது. ஆண் களைவிட பெண்களே அதிகம் கோபப்படுகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் பெரும்பாலானவர்கள் பண நெருக்கடியால் அதிகளவு கோப உணர்ச்சிக்கு தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் தனிப்பட்ட முறையில் பெரும் கோபக்காரராகவும், சமூக அமைப்பில் அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறார்கள்.

இந்த வினோதமான ஆய்வு முடிவுகள், கோபத்தைப் பற்றிய பிரபல புத்தகமான `இன்டர்நேஷனல் ஹேண்ட்புக் ஆப் ஆங்கர்' என்ற நூலின் 4-வது பாகத்தில் வெளிவர இருக்கிறது.

No comments:

Post a Comment