Pages

13 July 2009

எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் - திருமாவளவன்


கலைஞர் அவர்களே!

‘ராஜபக்ஷேவை ஆத்திரப்படுத்தாதீர்கள்’ என்ற தொனியில் இனிமேல் பேசாதீர்கள். இப்போது நீங்கள் செய்ய வேண்டிய மகத்தான கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது. ராஜபக்ஷே என்கிற அந்த அசுரனை அந்தப் பக்கம் இந்தப்பக்கம் நகரவிடாமல் ‘கிடுக்கிப்பிடி’ போடும் ஆற்றலும் அறிவும் மட்டுமல்ல கடமையும் உங்களுக்கு இருக்கிறது. அது உங்களால் முடியும். உங்களால் மட்டுமே முடியும். காங்கிரஸின் ரத்தக்கறை படிந்த ‘கை’யோடு கைகோத்தபடி நீங்கள் நின்றபோதே, உங்கள் அழைப்பை ஏற்று பலத்த மழையிலும் பல மணிநேரம் சொட்டச் சொட்ட நனைந்து-கொண்டு மனிதச் சங்கிலி அமைத்த தமிழர்கள் சார்பில் உங்களை உரிமையுடன் கேட்கிறேன்...

‘எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும்’ என்பது நீங்கள் அறியாததல்ல. ‘மனிதாபி-மானி’ ராஜபக்ஷே வாயைத் திறக்கும்போதெல்லாம் ரத்தவாடை வீசுவது உங்களுக்குத் தெரியும். சிதம்பரம்போல், ‘ராஜபக்ஷே சொல்வதைச் செய்வார்’ என்று நம்புகிற புத்தி உங்களுக்கு நிச்சயமாக இராது. அந்த நம்பிக்கையில் உங்களைக் கேட்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள நாங்கள், உலகெங்குமுள்ள ஒன்றரைக்கோடித் தமிழர்கள் என்று ஒட்டுமொத்தமாக உள்ள எட்டரைக்கோடி தமிழர்களுக்கும் ஓர் அழைப்பு விடுங்கள். இருபத்தாறு மைலில் நடந்த கண்மூடித்-தனமான இனப்படு-கொலைக்குக் காரணமான ராஜபக்ஷேவையும் மற்றவர்களையும் சர்வதேச அளவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கோரி, ஒரு குறிப்பிட்ட நாளில் தமிழ்நாட்டிலும், உலக நாடுகளிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் மனிதச் சங்கிலி அமைப்போம் என்று அறிவியுங்கள்.

ஒரே நேரம் என்பது முக்கியம். ஒரு நாட்டில் பகலாயிருக்கும்போது இன்னொரு நாட்டில் நள்ளிரவாய் இருந்தாலும் பரவாயில்லை. உலகம் முழுக்கப் பலகோடித் தமிழர்கள் ஒரே நேரத்தில் கைகோத்து நிற்போம். சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட எங்கள் தமிழர்களுக்கு நியாயம் கேட்க, விமானங்களாலும், பீரங்கி-களாலும் நச்சுக் குண்டுகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எங்கள் சொந்தங்களின் உயிர்களுக்கு நியாயம் கேட்க தெருவுக்கு வருவோம். எட்டரைக் கோடி பேரின் இணைந்த கைகள் உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்.

சர்வதேச நாடுகளின் அதிருப்திக்கு இலங்கை ஆளாகியிருக்கும் நேரம் இது. மனித உரிமைப்-படுகொலை என்று உலகின் பல நாடுகள் குரல்கொடுக்கின்றன. இந்த நேரத்தில், இப்படியொரு நிகழ்வை ஒருங்கிணைப்பதின் மூலம், சர்வதேசத்தின் ஆதரவையும் மிக எளிதாக உறுதி செய்யமுடியும். கொலைக்குற்றவாளியாக ராஜபக்ஷேவை கூண்டில் ஏற்ற முடியும். சர்வதேச அரங்கில், போர் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியனை அல்லது வெறியர்களை நிறுத்தும் நிலையில், இலங்கையின் திமிரும் சிங்கள வெறியர்களின் அகந்தையும் தானாகவே அடங்கும். முகாம்களில் வதைபடும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் நிலை தானாகவே உருவாகும். எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்!

இதைத்தான் கலைஞரிடம் எதிர்பார்க்கிறோம்.

வேறு யாரிடம் இதை எதிர்பார்க்க முடியும்?

No comments:

Post a Comment