Pages

08 July 2009

உடலையும் உள்ளத்தையும் அடக்கியாள - யோகா


சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த யோகா என்ற வார்த்தைக்கு "இணைப்பு" என்று பொருள். உட‌ல் ஆச‌ன‌ நிலைக‌ள் ம‌ற்றும் மூச்சுப்பயிற்சிக‌ள் மூலம் மனிதனை இறைவனுடன் இணைக்க முற்படும் மனித முயற்சியே யோகா என்றழைக்கப்படுகிறது.

யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுய முன்னேற்ற கருவி, உடல் மற்றும் மனநலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் இப்படிப் பலராலும் பலவிதமாக கருதப்படுகிற்து. மன அமையின்மை, மன அழுத்தம், அலைச்சல், வேலைப் பளு, மாசடைந்த உணவு, சுற்றுப்புற சூழல், ஊடகங்களின் தாக்கங்கள் ஆகிய போன்ற சமுதாய சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா ஒரு நல்ல ஆயுதம் என்கின்றனர்.

நம்மில் பலரும் யோகா என்றாலே, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து வலுவினை ஊட்டும் ஒரு சாதாரணமான உடற்பயிற்சி என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது உடற்பயிற்சிக‌ளுக்கெல்லாம் மேலான தத்துவங்களை மையமாகக் கொண்டுள்ளது.

சுமார் கி.மு. 150 வருடங்களில் உருவான பதஞ்சலி யோகசூத்திரத்தின் படி யோகாவில் யமம். நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் ம‌ற்றும் சமாதி என ஆக‌ மொத்தம் எட்டுவகையான வழிமுறைகள் உண்டு. ஆனால் பிந்நாட்களில் 15 ம் நூற்றாண்டில் ஆசனம் (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி), பிராணயமம் (சுவாசத்தை உள்ளே வெளியே இழுக்கும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய கதா யோகா உருவெடுத்து மற்ற மதத்தினருடன் எதிர்நோக்கும் தத்துவ தர்க்கங்களை சற்றே சாமர்த்தியமாக தவிர்த்து இன்று உலகமுழுவதிலும் பிரபலமாகி வருகிற‌து.

இன்றைய வாழ்க்கை முறை மனிதனுக்கு மனக்குழப்பம், மனக்கவலை, மனப்பதட்டம் என்பவற்றை ஏற்படுத்துகின்றது. இதனால் மனிதன் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நோய்களுக்கு ஆளாகின்றான். இந் நிலையிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் முன்னேற, யோகப்பயிற்சி துணைசெய்கின்றது. யோகம் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான, உற்சாகமான வாழ்க்கையை அளிக்கிறது

“நம் மூச்சின் வசத்தில் தான் வாழ்க்கை முழுதும் உள்ளது; உடலை மனத்துடன் இணைக்கும் நூலிழை மூச்சு தான்; அதனால் சுய உணர்வோடு கூடிய மூச்சின் இயக்கம் உடலை மட்டுமல்ல, மன உணர்வுகளையும் சீராக்குகிறது” என்று யோக தத்துவம் கூறுகிறது. மூச்சுப் பயிற்சிகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அடுத்த உயர் நிலைக்குக் கொண்டு செல்கின்றன என்றால் மிகையில்லை.


யோகப் பயிற்சியின் சிறப்புகள்

1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.

2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.

3. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.

4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.

5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.

ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்

1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.

2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.

3. பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.

4. மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.

5. தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.

6. உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.

7.வயிற்றில் உள்ள உறுப்புக்களைக் கசக்கி பிழிந்து கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

8.தேவையற்ற ஊளைச்சதைகளை அகற்றி உடலை உறுதியாக்குகின்றது.

உலகெங்கும், அநேகமாக எல்லா விளையாட்டு வீரர்களின் பயிற்சி வகுப்புகளிலும் யோகாவுக்கு இடம் உள்ளது. யோகா பயிற்சி செய்யும் மாணவர்களின் கற்கும் திறன், சுறுசுறுப்பு, நினைவாற்றல் இவை நன்கு வளர்ச்சியடைவதும் சந்தேகமின்றி நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும், பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர். கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் "செக்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில்,"68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்' என்று எழுதப்பட்டுள்ளது. மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. "யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்' என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment