Pages

08 July 2009

இந்திரா காந்தி இலங்கையில் சீனா இராணுவ தளம்அமைப்பதை தடுத்தார். ஆனால் இப்போது ஆயுத கிடங்கே திறக்கப்பட்டுள்ளது: பழ.நெடுமாறன்

கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சங்க கூட்டரங்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டுபேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாதவன் வரவேற்றார்.

நிகழ்வில் பழ.நெடுமாறன் கூறியதாவது:-

அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. ராணுவ உடன்பாடு நாடுகள் உருவாக்கப்பட்டது. 3-ம் உலகப்போர் வரும் என்ற அச்சம் நிலவிய போது அணிசேரா நாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்தினார் ஜவஹர்லால் நேரு. இதனால் 3-ம் உலகப்போர் வருவது தடுக்கப்பட்டது. ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்கும் போது குரல் கொடுத்தது அப்போதைய இந்தியா.

நேருவை தொடர்ந்து இந்திராகாந்தியும் அணிசேரா கொள்கையை தொடர்ந்து கடை பிடித்தார். வாஜ்பாயும் பின்பற்றினார். ஆனால் ராஜிவ்காந்தி காலத்தில் கொள்கை அடியோடு மாற்றப்பட்டது. இந்திரா காந்தி இருந்து இருந்தால் இலங்கையில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்படும் அவலநிலை இருந்து இருக்காது.

இலங்கையில் சீனா, மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கால் ஊன்றி விட்டன. சிங்கள ராணுவ வெற்றிக்கு 20 நாடுகள் உதவி செய்ததே காரணம் என்று அந்த நாடு கூறி உள்ளது. இலங்கையில் சீனா ஆயுத கிடங்கை திறக்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திரா காந்தி இலங்கையில் ராணுவ தளம்அமைப்பதை தடுத்தார். ஆனால் இப்போது ஆயுத கிடங்கே திறக்கப்பட்டு உள்ளது. தென் ஆசிய நாடுகளுக்கு ஆபத்து இது.

மேலும் இலங்கையில் உள்ள துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் குத்தகை சீனாவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள்சென்று விட்டது. தற்போது மன்னார் வளைகுடாவில் பெட்ரோல் எடுக்கும் உரிமமும் சீனாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

நாட்டின் பாதுகாப்பு கருதி நேரு, தென் மாநிலங்களில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள் அமைக்க திட்டமிட்டார். அதன்படி தென் மாநில பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவானது.

ஆனால் இலங்கையில் சீனாவின் நுழைவு, தென் மாநில பகுதியை பாதிக்கும் ஆபத்தாக மாறி விட்டது. இங்குள்ள அணுமின் நிலையங்களில் தாக்குதல் நடத்தினால் கதிர் வீச்சால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். கூடங்குளத்தில் தாக்குதல் நடத்தினால் மதுரையை தவிர மற்ற தென் மாவட்ட பகுதிகளும், திருவனந்த புரம் பகுதிவரை அழிவு ஏற்படும்.

ஆகவே ராஜீவ்காந்தி உருவாக்கிய தவறான வெளியுறவு கொள்கையால் இந்தியாவுக்கே பேராபத்து உருவாகும் நிலை ஏற்பட்டு விட்டது.

தமிழீழ தலைவர் பிரபாகரன் மிக நன்றாக, நலமாக உள்ளார். அந்த போராட்டத்தை தலைமை தாங்கி இன்னும் நடத்திக்கொண்டு இருக்கிறார். விரைவில் வெளிவந்து உங்களையும்,என்னையும் மகிழ்ச்சி ஏற்படுத்துவார்.

கடந்த 60 ஆண்டுகளில் 2 லட்சம் ஈழத்தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். 12 லட்சம்பேர் அகதிகளாக இந்தியா, உள்பட உலக நாடுகளில் காணப்படுகின்றனர். இவ்வாறு தியாகம் செய்த போராட்டம் தோற்காது. இது பகல்கனவு அல்ல. கச்சத்தீவு பிரச்சினைபற்றி பொது நல வழக்கு தொடர முடியுமானால் அதை தொடரலாம். இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.

No comments:

Post a Comment