Pages

05 May 2009

சோனியாவுடன் பிரச்சாரத்தில் கலந்துகொள்வாரா கலைஞர் ?


சென்னை தீவுத்திடலில் வருகிற 6-ந் தேதி மாலை தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் முன்னணி தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இந்நிலையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமைச்சர் கருணாநிதி விமானம் மூலம் திருச்சி சென்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். சனிக்கிழமை அவர் சென்னை திரும்பினார். இந்த சுற்றுப் பயணம் காரணமாக அவருக்கு மீண்டும் முதுகு தண்டு வடத்தில் கடும் வலி ஏற்பட்டது. மேலும் அவருக்கு காய்ச்சலும் அடித்தது.

இதனால் சென்னை அப்பல்லே மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல் அமைச்சர் கருணாநிதியின் உடல் நலம் சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால், அவரது பிரசார பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை வரை அவர் பங்கேற்க இருந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதி இன்னும் சில நாள்கள் ஓய்வு பெற வேண்டியுள்ளது. இதனால், அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்; எனவே, யாரும் அவரைப் பார்க்க முயற்சிக்க வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரசார நிகழ்ச்சிகள் ரத்து? முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தை, திருச்சியில் மே 1-ம் தேதி தொடங்கினார். இதன்பின், சென்னையில் ராயபுரம், மயிலாப்பூர், மே 4-ம் மதுரையில் என தொடர்ச்சியாக பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சென்னையில் மே 6-ம் தேதி பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதற்காக, தீவுத் திடலில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

1 comment:

Anonymous said...

kalanthu kolla kootathu

Post a Comment