Pages

02 April 2009

நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடியது


வன்னியில் சிறீலங்கா படையினரது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடி உள்ளது.

நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும், சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சூல்ஹைம், மற்றும் முக்கிய அரச உயரதிகாரிகள் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனுடன் தொலைபேசியில் தொடர்ப்புகொண்டு கலந்துரையாடியுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் சுமார் 30 நிமிடங்கள் நீடித்திருந்ததாகவும், படையினரது தாக்குதலால் வன்னி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அனைத்துலக ரீதியான நடவடிக்கைகள், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை விவாதம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டதாக, விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் கூறினார்.

வன்னியில் மக்களின் நிலை பற்றி எரிக் சூல்ஹைம் கவலை தெரிவித்தபோது, வன்னியில் இனப்படுகொலை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசின் தாக்குதல்கள் பற்றி நடேசன் விளக்கிக் கூறியிருக்கின்றார்.

அத்துடன், தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கான பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு இருப்பதாக, நோர்வே தரப்பிற்கு நடேசன் அழுத்தமாகத் தெரிவித்திருப்பதாகவும் புலித்தேவன் கூறினார்.

பாதுகாப்பு வலயம் என்ற குறுகிய நிலப்பரப்பிற்குள் மக்கள் அடக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள், கர்பிணிப் பெண்கள், மூதாளர்கள் என்ற அகவை வேறுபாடின்றி அனைவரும் கொல்லப்படுவதாகவும், நாளாந்தம் 100 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவதாகவும் நடேசன் சுட்டிக்காட்டினார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என இந்தக் கலந்துரையாடலின்போது விடுதலைப் புலிகளால் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா படைகளால் நாளாந்தம் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கும் இந்த போர் நிறுத்தம் அவசியம் என அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனால் அழுத்திக் கூறப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து நீங்கி சுதந்திரமாக வாழ விரும்பும் தமிழ் மக்கள் பற்றி அனைத்துலகம் அதிக அக்கறை கொள்ள முன்வர வேண்டும் எனவும், வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் பிரச்சினை அணுகப்பட முடியாது என்பதால், உடனடி போர் நிறுத்தம் அவசியம் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளால் நோர்வே தரப்பிற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த விதத்திலும் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு தமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை எனவும், ஒரு மணி நேரம்கூட தற்காலிகமானதொரு போர் நிறுத்தத்தைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளாது" என்றும் சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பிரதிநிதியுடன் ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பிரதிநிதி செல்வராஜா பத்மநாதனுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோம்ஸ் நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

வன்னியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகள் காரணமாக அங்கு தங்கியுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பேரவலம் தொடர்பாகவே கோம்ஸ் பத்மநாதனை சந்தித்து கலந்துரையாடியதாக கோம்ஸ் ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் பிரதிநிதி பாலிகக்காரவுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாகவும் கோம்ஸ் பாலிகக்காரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். உடனடியாக அந்த தகவல்கள் பாலிகக்கார மூலம் சிறிலங்கா அரசிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதியுடனான சந்திப்பை நோர்வே அரசு ஒழுங்கு செய்திருந்ததாக அரச தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

1 comment:

greatlover said...

நோர்வே தன்னுடைய பொறுப்பை கை கழுவ முடியாது!!அவர்கள் தலைமையில் நடை பெற்ற சமாதான பேச்சு வார்த்தை காலங்களில் இலங்கை தன் பலத்தை பெருக்கிக் கொண்டு விட்டது!! ஏமாந்த ஈழப் புலிகளுக்கு இராணுவ ரீதியான உதவிகளையும் செய்ய நோர்வேவிற்கு தார்மீக கடமை உள்ளது!!

Post a Comment