Pages

16 February 2009

நளினி-பிரியங்கா என்ன பேசினார்கள்?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள முருகன் அளித்த பேட்டி:-

வேலூர் பெண்கள் ஜெயிலில் இருக்கும் நளினியை கடந்தாண்டு மார்ச் மாதம் பிரியங்கா சந்தித்து தனது தந்தையின் மரணம் பற்றி நளினியிடம் பேசியுள்ளார். நளினியின் நலம் குறித்து விசாரித்துள்ளார். என்னை பற்றியும் எனது மகள் அரித்ரா பற்றியும் கேட்டுள்ளார்.

நளினியிடம் உங்கள் விடுதலை பற்றி பேசினீர்களா என கேட்டேன். அதற்கு அவர் தன் தந்தையை இழந்துவிட்டு என்னை சந்திக்க வந்தவரிடம் எப்படி நான் கேட்க முடியும்? ஒரு மகளாக அவர் தன்னுடைய தந்தையை இழந்தது அவருக்கும் மிகப்பெரிய பாதிப்புதான். அதனால் அவரிடம் எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்பது விருந்தாளியிடம் கடன் கேட்பது போன்றது அல்லவா? என்றார் நளினி.

பிரியங்கா என்னையும் நேரில் வந்து சந்திப்பதாக தான் இருந்தது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜெயிலில் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை.

எங்களுக்கு விடுதலை கிடைக்கப் போவதில்லை. நாங்கள் எங்கள் குடும்பத்தாருக்கு சுமைகளாகத்தான் இருக்கிறோம். அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருத்தம் எனக்கு இருக்கிறது. தற்போது என் தம்பிதான் எங்களுடைய குடும்பத்தை தாங்கிக் கொண்டிருக்கிறார்.

என் மகள் தற்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த வருடம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று நினைத்துள்ளோம். ஆனால், அதற்கு செலவுகள் அதிகமாகும். அவள் இங்கிருந்து லண்டன் செல்வதற்கே ரூ.20 லட்சம் செலவாகியுள்ளது. நாங்கள்தான் இந்த நிலைக்கு ஆளாகி விட்டோம். எங்கள் மகளாவது நன்றாக இருக்க வேண்டும்.

என்னால் என்னுடைய குடும்பத்திற்கு செய்ய முடியாததை என் மகள் மூலமாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

தற்போது இலங்கை போரை பொறுத்தவரை ராஜீவ்காந்தி குடும்பத்தினர் பழி வாங்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக கூறப்படுகிறது. ராஜீவ் காந்தி குடும்பத்தினர் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள்.

அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அப்படி செயல்பட மாட்டார்கள் என்றே நம்புகிறேன். இந்தப் போருக்கு வேறு எதாவது அரசியல் பின்னணிதான் காரணமாக இருக்க வேண்டும்.

வியட்நாம் விடுதலைப் போரில் 3 கோடி பேருக்கு மேல் செத்தார்கள். அதற்கு பிறகுதான் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. அதுபோல் இலங்கையில் 10 லட்சம் தமிழராவது சாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது என்றார் முருகன்.

No comments:

Post a Comment