ஐ.நா.விடம் இலங்கை அரசு அளித்துள்ள வரைவு தீர்மானம் அந்த நாட்டின் தமிழர்களுக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் அங்குள்ள தமிழர்களின் நலனை மனதில் கொண்டு இந்தியா முடிவெடுக்க வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்தப் பிரச்னையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இலங்கையின் அண்டை நாடான இந்தியா அந்த நாட்டு அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களின் வருங்காலத்தை மனதில் வைத்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை, முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மன்மோகன் சிங்குக்கு, கருணாநிதி செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு நாட்டின் பிரச்னையில் பிறநாடுகள் தலையிடுவது அந்த நாட்டின் உள்விவகாரங்களில் குறுக்கிடுவது ஆகாதா? அதன் இறையாண்மை, மாகாண ஒற்றுமை ஆகியன பாதிக்கப்படாதா? என்ற கேள்விகள் ஒருபுறம் எழுகின்றன.
ஆனாலும், இலங்கையை சிறப்பு நேர்வாகக் கருத வேண்டும். ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலிடம், வரைவு தீர்மானம் ஒன்றை இலங்கை அரசு அளித்துள்ளது. அது, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கருதப்படுகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது வருங்கால வாழ்வின் நலனையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தனது கடிதத்தில் முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment