பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்துடன், தன்னை சம்பந்தப்படுத்தி பேசியதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளார். அதில் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி சார்பில் அரசு வக்கீல் ஏ.சரவணன் நேற்று அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது.
திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் நீங்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாகவும், மோசமான வகையிலும் பேசிய செய்தி, 31.5.2009 அன்று வெளிவந்த ஒரு நாளிதழில் வெளியாகியுள்ளது. அந்த கூட்டத்தில் நீங்கள் பேசுகையில், ``இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதை திறமை வாய்ந்த போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லையா? பாரதிராஜாவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தவரே முதல்வர் கருணாநிதிதான். அவருக்கு தெரிந்து அவரது ஒப்புதல் பெற்றுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது'' என பேசியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாக்கியங்கள் மோசமானதாக மட்டும் அல்லாமல் அவதூறாகவும் உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சரின் நன்மதிப்பை குறைக்கும் நோக்கில் இந்த வாக்கியங்கள் பேசப்பட்டுள்ளன. சமீபத்தில் தேர்தலில் கிடைத்த மோசமான முடிவுகளின் காரணமாக, எதிர்க்கட்சி தலைவரான நீங்கள் பழிவாங்கும் மற்றும் அரசியல் நோக்கத்துடன், முதல்-அமைச்சரை பற்றி அவ்வாறு பேசியது அவதூறானதாகும்.
நீங்கள் நிபந்தனையில்லா மன்னிப்பு கோரவேண்டும். இந்த நோட்டீசு கிடைத்த 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு தெரிவிக்காவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எனது கட்சிக்காரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment