01 June 2009
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 5,155.79 கோடி தொடர் செலவினம் ஏற்படும்.
இந்த உயர்வு, ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் உயர்வுடன் சம்பளம் பெறலாம். படிகள் இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, தமிழகத்தில் அமல்படுத்த அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை முதல்வர் கருணாநிதியிடம் கடந்த 27-ம் தேதி அளித்தது.
குழுவின் பரிந்துரைகளை ஏற்று, அதற்கான உத்தரவுகளை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளது. நிதித் துறை செயலாளர் ஞானதேசிகன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்... அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இப்போது பெற்று வரும் ஊதிய விகிதத்துக்கு இணையான திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும்.
இப்போதுள்ள ஊதிய விகித முறைக்கு ஏற்ப ஊதியத் தொகுப்புக்கான தர ஊதியம் வழங்கப்படும்.
பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் இப்போது நடைமுறையில் உள்ள ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 13,500 ஊதிய விகித முறையில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஒரே ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள்... உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர்கள் இப்போது பெற்று வரும் ஊதிய விகிதத்தை விட ஒரு நிலை மேம்படுத்தி புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 2007 டிசம்பர் 12 முதல், ரூ. 7,000 - 225 - ரூ. 11,500 என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு இணையாக திருத்திய ஊதிய விகித முறையில், ரூ. 9,300 - 34,800 என்ற ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியமாக ரூ. 4,800 நிர்ணயிக்கப்படும்.
அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ள மேம்படுத்தப்பட்ட திருத்திய ஊதிய விகிதம், அதுபோன்ற இதர பணிகளில் உள்ள அலுவலக கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் இந்தப் பணியிடங்களில் பரிமாற்றம் செய்யத் தகுந்த பிற வகைப் பணியிடங்களான துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார் பதிவாளர் போன்ற பணியிடங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
அமைச்சுப்பணி கண்காணிப்பாளர்களுக்கு மேம்படுத்தபட்ட ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதன் பதவி உயர்வு பணியிடங்களின் ஊதிய விகிதத்தினை கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் ரூ. 7,500 - 250 - ரூ.12,000 என நிர்ணயம் செய்யப்பட்டது.
தற்போது திருத்திய ஊதிய விகித முறையில் ரூ. 9,300 - 34,800 என்ற விகிதத்திலும், தர ஊதியமாக ரூ. 4,900-ம் வழங்கப்படும்.
படிகள் இரட்டிப்பு... மத்திய அரசு அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிமுறைகளே மாநில அரசு அலுவலர்களுக்கும் கடைப்பிடிக்கப்படும்.
ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக, தற்போது நடைமுறையில் உள்ள நிலையே தொடரும். மேலும், திருத்திய ஊதிய விகித முறையில் ஆண்டு ஊதிய உயர்வு மத்திய அரசில் உள்ளவாறு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் மூன்று சதவீதம் சேர்த்து வழங்கப்படும்.
மாநில அரசு அலுவலர்கள் தற்போது பெற்றுவரும் சிறப்பு ஊதியம் திருத்திய ஊதிய விகித முறையில் அதே அளவில் தொடர்ந்து வழங்கப்படும். படிகள் இரட்டிப்பாக்கப்படும்.
அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தினப்படி இரட்டிப்பாக்கப்படும். வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி உள்பட அனைத்து படிகளும் இரட்டிப்பாகும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment