20 ஓவர் உலக கிரிக்கெட்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்சிங், ஓஜா ஆகியோரின் சிறப்பான செயல்பட்டால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு நாட்டிங்காமில் நடந்த `ஏ' பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. காயம் காரணமாக ஷேவாக் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதே சமயம் உடல்தகுதி பெற்று விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி கவுதம் கம்பீரும், ரோகித் ஷர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். இருவரும் அணிக்கு ஓரளவு பயனுள்ள துவக்கத்தை தந்தனர். அணியின் ஸ்கோர் 59 ரன்களை தொட்ட போது, ஷகிப் அல்ஹசன் பந்து வீச்சில் ரோகித் ஷர்மா (36 ரன்கள், 23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டு ஆனார்.
அடுத்து கேப்டன் டோனி உள்ளே வந்தார். கம்பீரும், டோனியும் ஒன்று, இரண்டு ரன்கள் வீதமே அதிகமாக எடுத்தனர். இதனால் அடுத்த 6 ஓவர்களில் ரன்வேகம் வெகுவாக குறைந்தது. டோனி 26 ரன்களில் (21 பந்து, ஒரு சிக்சர்) போல்டு ஆனார்.
இதை தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு யுவராஜ்சிங் களம் புகுந்தார். அவர் வந்த பின்னரே ஆட்டத்தில் சூடு பிடித்தது. ரசிகர்களும் குஷியானார்கள். நயீம் இஸ்லாம் ஓவரில் யுவராஜ்சிங் 3 சூப்பரான சிக்சர்களை கிளப்பினார். ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதற்கிடையே கம்பீர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் தனது 5-வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதே ரன்னிலேயே (50 ரன், 46 பந்து, 4 பவுண்டரி) அவர் வெளியேறினார். அடுத்து சுரேஷ் ரெய்னா வந்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிக் கொண்டிருந்த யுவராஜ்சிங் சிக்சர் அடிக்க முயற்சித்த போது கேட்ச் ஆனார். அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள் விளாசினார். ரெய்னா 10 ரன்களில் (8 பந்து) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் 67 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேச அணி விளையாடியது. தொடக்கத்தில் அந்த அணியின் ஆட்டம் இந்தியாவுக்கு பீதி ஏற்படுத்துவது போலவே இருந்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 15 ரன்னிலும், 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் அஷ்ரபுல் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். என்றாலும் ஒரு கட்டத்தில் வங்காளதேச அணி 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.
இதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஒரே ஓவரில் ஜூனட் சித்திக் (41 ரன், 22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் ( 8 ரன்) ஆகியோரை காலி செய்தார். அத்துடன் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. ஓஜாவின் சுழலில் மேலும் 2 விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அவர்களால் இலக்கை தொட முடியவில்லை. 20 ஓவரில் வங்காளதேச அணியால் 8 விக்கெட்டுக்கு 155 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஓஜா 4 விக்கெட்டும், இஷாந்த் 2 விக்கெட்டும், ஜாகீர், யுசுப் பதான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஏறக்குறைய சூப்பர்-8 சுற்றை உறுதி செய்து விட்ட இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி அயர்லாந்துடன் மோதுகிறது.
No comments:
Post a Comment