Pages

13 February 2009

தமிழர்களோடு பாரதிய ஜனதா நிற்கும் - அத்வானி


இலங்கையில் உடனடியாக போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையை துவ‌க்க வேண்டும் என்றும், இப்பிரச்சனையில் தமிழர்களோடு பாரதிய ஜனதா நிற்கும் என்றும் பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
இலங்கை இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்குவதை கண்டித்தும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் நாடாளுமன்றம் அருகே இன்று வெள்ளிக்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

புதுடில்லி ஜந்தர் மந்திர் பகுதியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் அருகே காலை 8:00 மணிக்கு உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன், தேசியச் செயலாளர் அ.ராஜா, பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.இராமதாஸ், பொன்னுசாமி, அ.கி.மூர்த்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அத்வானி பேச்சு:
இலங்கையில் நடைபெற்று வரும் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசித் தாக்கப்படுகின்றது.

உலக வரலாற்றில் மருத்துவமனைகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய கொடுமையை நான் இதற்கு முன் கேள்விப்படவில்லை. இலங்கை வடக்குப் பகுதியில் தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாக்கப்படுகின்றனர்.

இவை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இதில் வருத்தமளிக்கக்கூடிய விடயம் என்னவெனில், இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய மத்திய அரசு இந்த விடயத்தில் பொறுப்பின்றி செயற்படுகின்றது.

இலங்கை இனச் சிக்கலுக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது. அமைதிப் பேச்சுக்கள் மூலமாகவே தீர்வு காண முடியும். எனவே, இலங்கையில் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார் அத்வானி.

No comments:

Post a Comment