அது எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நீதிக்கட்சி திராவிட கழகமாய் பெயர் மாற்றம் பெற்று இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதை, சமூக சீர்த்திருத்தத்தை தன் களமாய் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருந்த காலம்.
திராவிடர் கழகத்துக்கென தனி கொடியில்லை. கழக முன்னணியினர் கழகத்துக்கு என ஒரு கொடி வேண்டும் என முடிவு செய்து கொடியினை வடிவமைக்க கூடியிருக்கிறார்கள். தேசத்தின் இழிவை குறிக்கும் வகையில் கருப்பு நிறமும், அந்த இழிவினை ஒழிக்கும் புரட்சி நிறமாக சிகப்பினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.
"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது.
அந்த இளைஞர் 88 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளின் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.
இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு தமிழினத் தலைவரின் ரத்தம்!
அரசியல் தலைவர்களிலேயே அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி முழுமையான வாழ்வினையும், எவரெஸ்ட் உயரத்தையும் அடைந்த பரிபூரணத் தலைவர் ஒருவர் உண்டென்றால் உலக வரலாற்றிலேயே அது தமிழினத் தலைவர் கலைஞர் மட்டுமே.
நடிகர் திலகம் ஒருமுறை சொன்னபடி நமது வாழ்நாளிலே சிலவற்றை யாருக்காவது தரமுடியுமேயானால் உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் பாதியை தலைவர் கலைஞருக்கு தந்து... இன இழிவு நீங்க, தமிழனின் புகழ் தரணியெங்கும் பரவ அந்த தங்கத் தலைவனை பல நூற்றாண்டுகளுக்கு வாழவைத்திட வேண்டும்.
வாழும் தமிழே வாழி! நீ வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழனின் புகழ் உயரும் என கூறி, தமிழின் முகவரியாய் வாழும் வள்ளுவன் தலைவர் கலைஞரை வாழ்த்த வயதில்லாமல் உடன்பிறப்புகள் வணங்குகின்றோம்.
வாழ்க தமிழ்!! வெல்க தமிழினத் தலைவரின் நெஞ்சுரம்!!!
Source: http://www.luckylookonline.com/2011/06/blog-post.html